1200 வருஷங்களுக்கு மேலாக உள்ள ஒரு அற்புத ஆலயம் இது. இங்கே விசித்திர பெயர் கொண்ட ஒரு ஸ்வயம்பு சிவன், பெரிய ஆவுடையாரோடு ஐந்தடி உயர லிங்கமாக அருள் பாலிக்கிறார். அவரது நாமம் . ”நல்லிணக்கீஸ்வரர்’ . எல்லோரிடமும் நல்லிணக்கம் அவசியம் என உணர்த்த ஒரு சிவன் தேவைப்பட்டிருக்கிறார். மனதில் இந்த எழுச்சி அவசியம் என்பதால் தான் ”நல்லிணக்கீஸ்வரர்” எழுச்சூரில் எழுந்தருளி இருக்கிறார்.
இந்த அதிசயமான வெளியே அதிகம் தெரியாத சிவாலயம் சென்னையிலிருந்து 57 கி.மீ. தூரத்தில் எழுச்சூர் என்கிற ஊரில் தாம்பரம் – காஞ்சிபுரம் வழியில் இருக்கிறது. நேரே படப்பை தாண்டி போனால் ஒரகடம் கூட்டு (ஜங்ஷன்) வரும் . அங்கே மஹாமேரு த்யான நிலையம் வரும். அதை வணங்கிவிட்டு இன்னும் 3 கி.மீ. போனால் எழுச்சூரில் கொண்டு விடும்.
சிவனின் மூல ஸ்தானத்துக்கு இடது புறம் தெற்கே பார்த்தபடி அம்பாள் தெய்வநாயகி. ஒவ்வொருநாளும் ஒரு பெரிய கால சர்ப்பம் உச்சி வேளையிலும் அர்த்தஜாமத்திலும் சிவனை தரிசிக்க வருகிறது. தினமும் ரெண்டு தடவை சர்ப்ப விஜயம் நடப்பதாக அர்ச்சகர்கள் சொல்வது நிஜமாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த ஆலயத்தின் முக்யத்துவம் என்னவென்றால், இங்கே காஞ்சி காமகோடி மடத்தின் 54வது பீடாதிபதி (1498-1507) ஸ்ரீ வ்யாஸாசால மஹாதேவ சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம் இங்கே இருப்பது தான். ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் விக்ரஹமும் இங்கே ப்ரதிஷ்டையாகி இருக்கிறது. இந்த ஆலயத்தையும் கிராமத்தையும் 54வது பீடாதிபதிக்கு காஞ்சி அரசாண்ட மன்னன் தானமாக வழங்கியது பற்றி ஒரு செப்பு பட்டயம் காஞ்சி மடத்தில் இருக்கிறதாம்.
இங்கே சிவனின் அழகிய நந்தி வித்தியாசமானவர். ரஜோகுண நந்தி. நிறைய ஆடை ஆபரணம் தரித்தவர். மனிதர்கள் போட மாட்டார்கள் என தெரிந்தே அந்த காலத்திலேயே யாரும் திருடமுடியாதபடி பெர்மனண்டாக கல்லிலேயே அழகாக செதுக்கப்பட்ட நகைகள். ஆபரணங்கள். மஹா பெரியவருக்கு பிடித்த நந்தி இது. மழுங்கின கொம்பு, கூரான காதுகள், கழுத்தில் மணி, ருத்ராக்ஷ மாலை, நெற்றி சுட்டி, இடுப்பில் ஒட்டியாணம், மூக்கணாங்கயிறுடன் நந்தி யோக நிலையில், ஓம் நமசிவாய என்று ஜபித்தபடி காயத்ரி மந்திரம் கேட்கிறார். அவர் பிராணாயாமம் செய்து கொண்டிருப்பதை அவரது நாக்கு வலது நாசியை மூடியபடி இருப்பதாக காட்டிய சிற்பி கற்பனா சக்தி மிக்கவான். நந்தியம்பெருமானின் கால்களுக்கு மேலே யாளி.

நந்தியின் உள்ளடங்கிய கால் வயிற்றுக்கு கீழே அழுந்தி நந்தியின் காலும் வாலும் நந்தியின் இடது பக்கம் வெளியே வாலின் நுனியோடு தெரியும்படி அமைத்த சிற்பிக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் தகும். ராஜா கொடுத்திருப்பார். நாம் நம்மால் முடிந்த ஒரு ஜே போடுவோம். இந்த நந்தி அருகே உட்கார்ந்து காயத்ரி ஜபம் பண்ணுபவன் பாக்கியசாலி. அடுத்த பிறவியில் நாம் காண முடியாதவன்.
இந்த ஆலயத்தின் ஒரு ஸ்தல விருக்ஷம் வில்வம். இன்னொரு ஸ்தல விருக்ஷம் அழிஞ்சல் மரம். சிங்கப்பெருமாள் கோவிலில் ஒரு அழிஞ்சல் மரம் பார்த்திருக்கிறேன். சமஸ்க்ரிதத்தில் அங்கோலம் என்று பெயர் பெற்ற விருக்ஷம் சிரஞ்சீவி. தக்க சமயத்தில் பௌர்ணமி, அமாவாஸ்யா சமயத்தில் கனி முற்றி வெடித்து விதை சிதறி அது காற்றில் மிதந்து திரும்பி வந்து தாய்மரத்தின் வேரிலோ மரத்தில் கிளையாகவோ பொருந்தி மீண்டும் உயிர் பெற்று புதிய வாரிசாகிறது.
ஆறு தலைமுறை தாண்டிய ஒரு பெண் பனைமரம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஆலய கோபுர உயரத்தை மீறுவதில்லை. அது மூன்றாவது ஸ்தல விருக்ஷம்.
கோவிலை ஒட்டி ஒரு குளம். அதீத சக்திகளை கொண்ட அதிசயம் அது. ”கமல தீர்த்தம்”. . படிக்கட்டில் ஒரு நாகத்தின் சிலா ரூபம். அதற்கு அபிஷேகம் பண்ணுவது நமது தோஷங்களை போக்குவதற்கு.

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்
1948 வரை புதராக செடி கொடி வளர்ந்து காட்சியளித்த இந்த சிதிலமான ஆலயத்தை எழுச்சூரில் ஆட்டோ ஓட்டும் ஒரு முஸ்லீம் ”நல்லிணக்கத்தோடு” பார்த்து விட்டு நல்லிணக்கீஸ்வரரை வெளிப்படுத்த தூங்கிக்கொண்டிருந்த ஹிந்துக்களின் சிலர் விழித்துக்கொண்டு புதரை எல்லாம் வெட்டி ஆலயத்தை கண்டுபிடித்து ஜீரணோத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்தார்கள். 2012 ல் மீண்டும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.
உள்ளே நுழைந்தவுடன் நம்மை வரவேற்பவர் வழித்துணை விநாயகர். இவரோடு ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் துர்கா, மஹாலக்ஷ்மி, தக்ஷிணா மூர்த்தி, சுப்பிரமணியர் ப்ரம்மா சண்டிகேஸ்வரர், வள்ளலார், ஆகியோரும் இருக்கிறார்கள். இந்த கோவிலில் 31 மஹான்களின் சமாதிகள் புதையுண்டு இருப்பதாகவும் இன்னும் அவற்றை தோண்டி வெளிப்படுத்தவில்லை என்றும் கோவில் தர்மகர்த்தா ஸ்ரீ ராமமூர்த்தி சொன்னதாக அறிகிறேன். ஆலயம் காலை 6மணி முதல் 12.30 வரை, மாலையில் 4 முதல் 8.30 மணி வரை திறந்திருக்கும்.
புதை பொருள் ஆராய்ச்சி குழு இந்த ஆலயத்தை பரிசீலித்து இது 920 வருஷங்களுக்கு முந்தையது என்று சொல்கிறது. 13ம் நூற்றாண்டு சோழன் கோப்பரகேசரி பன்மார், காட்டியது. அவனை பராந்தக சோழன் என்பார்களாம். அப்போது இந்த ஊரின் பெயர் வெளிமா நல்லூர். இப்போது எழுச்சூர். எப்படி? யாருக்கு தெரியும்? இந்த பகுதிக்கு அப்போது தலைவனாக இருந்தவன் நொச்சி கிழான் கலியபெருமான். அப்போதெல்லாம் யாருக்குமே குட்டியாக பெயர் கிடையாது. முழு அட்ரஸ் அவன் பேரிலேயே இருக்கும்.
இன்னொரு செப்பு பட்டயம் வேறொரு செய்தி சொல்கிறது: 1429ம் வருஷ பட்டயம். துங்கபத்ரா நதிக்கரையில் வாசம் செய்த விஜயநகர ராஜா வீர நரசிம்மன் எப்படியோ இந்த ஆலயத்தை பார்த்திருக்கிறான். ரொம்ப பிடித்துவிட்டது அவனுக்கு. அருகே காஞ்சிபுரத்தில் காமகோடி மட 54வது பீடாதிபதீயை, ஸ்ரீ வ்யாசாசல மஹாதேவ ஸரஸ்வதி யையும் தரிசித்தபோது இந்த ஆலய சிவன் மகிமைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார். அவர் இந்த ஆலயத்தில் தினமும் நல்லிணக்கீஸ்வரரை பூஜித்து இங்கேயே முக்தி எய் தியவர் . வீர நரசிம்மனுக்கு சிவனையும் சங்கரமடாதிபதியையும் ரொம்ப பிடித்து விட்டது. எல்லாம் நல்லிணக்கம் செய்யும் வேலை. உடனே எடுத்தான் ஒரு ஓலையை. எனது ராஜ்யத்தை சேர்ந்த இந்த எழுச்சூர் அதை சேர்ந்த வெண்பாக்கம் ஆகிய கிராமங்களை வியாஸாச்சலர் பொறுப்பில் உள்ள காஞ்சி காமகோடி மடத்துக்கு உடைமையாக எழுதி வைத்து விட்டான்.