அருள்மிகு ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலயம், திரிகூடா மலை, காட்ரா, ஜம்மு காஷ்மீர்
சக்தி பீடங்களில் மிகச் சிறப்பானதாக போற்றி வணங்கப்படுவது இந்த கோவில்

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலயம்
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவிலிருந்து 53 கி.மீ. தூரத்தில் காட்ரா (Katra) என்ற இடம் உள்ளது. அங்கு திரிகூடா மலையில் இவ்வழகிய குகைக் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் உருவங்கள் கிடையாது. மகா காளி, மகாலக்ஷ்மி, மகா சரஸ்வதி என மூன்று பிண்டங்கள் தேவிகளாக ஆவாகனம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது.
பார்வதி தேவியின் இடதுகரம் இவ்விடத்தில் விழுந்ததால் சக்தி பீடமாக போற்றி வணங்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் பண்டைய ராஜாக்களால் அளிக்கப்பட்ட சில விக்கிரங்களும், யந்திரங்களும் பிண்டத்திற்கு அருகில் உள்ளன.
காட்ரா என்ற இடத்திலிருந்து மலைப் பாதையில் நடந்து சென்று மலை மீது அமர்ந்துள்ள அன்னையைத் தரிசிக்க வேண்டும்.
வாகனங்கள் அங்கு செல்லாது. காட்ராவிலிருந்து தேவி ஆலயம் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாதயாத்திரையாகச் சென்றால் 4 மணி நேரமாகும். நடக்க இயலாதவர்கள் மட்ட (குள்ள) குதிரைகள் மீது ஏறிச் செல்லலாம். டோலிகளும் உண்டு. மலைப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள அலுவலகத்தில் யாத்ரீகர் ரசீது வாங்கினால்தான் பயணம் மேற்கொள்ள முடியும்.

கோவில் வளாகம் வரை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் கொண்டு செல்லும் ரசீது, நமது உடமைகள் என எல்லாம் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் நன்கு பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கிறார்கள்.
அன்னையின் அவதாரம் லோகமாதா*
அரக்கர்களின் அட்டூழியங்களை அழித்து, உலகம் உய்ய, பூலோகத்தில் குழந்தையாக அவதரித்தாள். அவளது ஆக்ஞைப்படி தென்னிந்தியாவில் ரத்னசாகர் என்பவர் இல்லத்தில் அவர்களது குழந்தையாக வளர்ந்தாள். அதிரூப சௌந்தரியாக, திரிகுடா என்ற பெயரில் தெய்வக் குழந்தையாக வளர்ந்து வந்தாள்.
குமரிப் பருவம் வந்ததும் தமது பெற்றோரை வணங்கி, தாம் விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானை நினைத்து தவம் இயற்றப் போகிறேன். அதற்கு உத்தரவு தாருங்கள் என வேண்டி நின்றாள் ரத்னா சாகர் திரிகுடாவை ஆசீர்வதித்து தவம் மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.
வைஷ்ணவி தேவி ஜெகதீஸ்வரி கடற்கரையோரம் ஸ்ரீ ராமபிரானை நினைத்து தவமேற்கொண்டாள். ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி சீதாபிராட்டியாரைத் தேடிக் கொண்டு, தமது பரிவாரங்களுடன் கடற்கரையோரம் வந்தார். அங்கு இளம்பெண் தன்னந்தனியாக தவத்தில் இருக்க ஆச்சரியப்பட்டு, யார் இந்தப் பெண் என வினவினார். தேவி திரிகுடா, ஸ்ரீராமரை வணங்கி, அவரை நினைத்துத்தான் தவமியற்றினேன் எனக் கூறி, ஸ்ரீராமரை மணக்க விரும்புவதாகவும் கூறினாள்.

அதற்கு ஸ்ரீராமர், தான் ஏகபத்தினி விரதன் எனவும், சீதாபிராட்டியைத் தேடிக் கொண்டு இவ்விடம் வந்ததாகவும் கூறினார். ஸ்ரீ ராமபிரான் தேவி திரிகுடாவிற்கு ஒரு வாக்கு கொடுத்தருளினார். எனது வேலைகளை முடித்துக் கொண்டு, திரும்பி வருவேன். அப்போது உனக்கு வழி காட்டுவதாகவும் கூறி சென்றார்.
ஸ்ரீராமர், திரும்பி வந்து வருத்தமுற்ற தேவிக்கு ஆறுதல் கூறி, வட நாட்டில் ஒரு இமயமலையில் ஒரு இடத்தை குறித்துச் சொல்லி அங்கு சென்று தவமியற்றி, மக்களுக்கு அருட்புரிந்து வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கலியுகத்தில் கல்கி அவதாரத்தில் தேவியை மணமுடிப்பதாக உறுதி கூறினார். தேவி திரிகுடா அங்கு வாசம் செய்ததால் திரிகுடா மலை எனப்பெயர் பெற்றது. விஷ்ணுவின் அவதாரமான ராமபிரானை வழிபட்டதால் வைஷ்ணவி (விஷ்ணு தேவி) என்ற திருநாமம் பெற்றாள் தேவி.
மாதா வைஷ்ணவி தேவி தரிசனம் பண்டிதர் ஸ்ரீதர் என்பவர் சிறந்த பக்திமான். காட்ரா நகரத்தில் உள்ள அன்சாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
தனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என மனமுருகி தேவியிடம் வேண்டினார். அவர் தியானம் செய்த இடம் மரங்களடர்ந்த திரிகுடா மலைப் பிரதேசம். பண்டிட் ஸ்ரீதர் தியானத்தில் இருந்தபோது கண்ணெதிரே ஒரு பேரொளி பரவியதையும், சலங்கை சத்தத்தையும் கேட்டு ஆச்சரியப்பட்டார். பின் தனது சிறிய குடிலுக்கு வந்து கன்னிகா ( குமாரிகள் ) பூஜை செய்தார்.
ஆறு பெண் குழந்தைகள் வந்திருந்தன. ஆறு குழந்தைகள் உட்கார்ந்திருக்க, ஏழாவதாக ஒரு பெண் குழந்தை சிகப்பு ஆடை அணிந்து, கால்களில் கொலுசு அணிந்து அதிக ஒளி பொருந்திய மங்களகரமான அழகுடன் விளங்கியது. தேஜஸ் பொருந்திய அக் கன்னிகையின் கால்களை அலம்பி, பூஜை செய்து, மலர்கள் கொடுத்தார். இதே போல் மற்ற பெண் குழந்தைகளுக்கும் செய்து, பின் அவர்களுக்கு உணவு வழங்கி, தட்சிணை வழங்கினார். மற்ற குழந்தைகள் சென்று விட, சௌந்தர்யம் நிரம்பிய அப்பெண் குழந்தை பண்டிட் ஸ்ரீதரிடம்.
நான் முக்கியமான வேலை நிமித்தம் இங்கு வந்துள்ளேன். உன் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரையும் நாளைக்கு உன் குடிலுக்கு வரும்படி அழைப்பு விடு. கடவுளுக்காக விருந்துப் படையில் செய்யப் போவதாக அவர்களிடம் கூறு எனச் சொல்லி மறைந்து விட்டாள். பண்டிட் ஸ்ரீதர் ஒன்றும் புரியாது திகைத்து நின்று விட்டார்.

தெய்வ ஸ்வரூபமான இச்சிறிய பெண் யார் ? என விடை தெரியாது மலைத்து நின்றார். தனது கிராமத்திலுள்ளவர்கள், அண்டை அயலார்கள் இத்தனை பேருக்கும் வேண்டிய அளவு உணவுப் பொருட்களை எப்படிச் சேகரிப்பது ? எப்படிச் சுவையாக சமைப்பது என விடை தெரியாது விக்கித்து நின்றார். பின் ஒவ்வொருவர் இல்லமாகச் சென்று அழைப்பு விடுத்தார்.
பின் பைரவநாத் என்ற உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள பண்டிதரைச் சென்று அழைத்தார். அப் பண்டிதர் யார் அந்தச் சிறுமி ? உன்னால் குறைவற விருந்து படைக்க முடியுமா ? தவறு நேர்ந்தால் தெய்வ சாபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தார். இவர்களுக்கெல்லாம் மேலான குருவான கோர்க்நாத், இந்த சோதனையை எப்படி வெல்லப் போகிறாய். தெய்வாம்சம் பொருந்திய அச்சிறுமியை பார்க்க நாங்கள் எல்லோரும் நாளைக்கு உன் குடிலுக்கு வந்து விடுகிறோம் என்று பண்டிட் ஸ்ரீதரிடம் உறுதி கூறினார்.
எல்லோரையும் சென்று விருந்துக்கு அழைத்ததில் பண்டிட் ஸ்ரீதர் மிகவும் களைப் படைந்து அயர்ந்து தூங்கி விட்டார். மறுநாள் பொழுது புலரத் தொடங்கியது. கண் விழித்துப் பார்த்த பண்டிதர், கிராமத்தினர் ஒவ்வொருவராக தனது குடிலுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்டார். இனி நான் எவ்விதம் விருந்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன் என அச்சமுற்றார். வானத்தில் அசரீரி கேட்டது.
விருந்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். விருந்தினர்களை உன் குடிலுக்கு அழைத்துச் செல் என்றது. பண்டிட் ஸ்ரீதர் சற்று மனம் தெளிந்தவராக, நீராடி, உடை அணிந்து, விருந்தினர்களை உபசரித்து தனது குடிலில் அமரச் செய்தார். குருமார்கள் கோரக்நாத், பைரவ் நாத் தனது சீடர்களின் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தனர். குடிலின் உள்ளே எப்படி இத்தனை பேர் உட்கார முடியும் ? இந்தத் திறந்தவெளியில் உட்கார்ந்து கொள்கிறோம் என்றனர். அதற்கு பண்டிதர் அச் சிறுமி எனது குடிலில்தான் எல்லோரையும் அமரும்படி செய்யச் சொன்னாள் என பதில் கூறினார்.
எல்லோரும் சென்று குடிலினுள்ளே அமர்ந்திருந்தனர். இத்தனை பேர் உட்கார்ந்தும் மேலும் சிலர் உட்கார இட வசதியிருந்ததை உணர்ந்தார் குரு பைரவநாத். வந்திருந்த அத்தனை பேருக்கும் சிறிய கமண்டலத்திலிருந்து பலவிதமான உணவு வகைகளை அச்சிறு பெண் மட்டுமே பரிமாறினாள். குரு பைரவநாத் தனது தவ வலிமையினால் தேவியின் ஸ்வரூபமான சிறு பெண்ணை இனம் கண்டுக் கொண்டு, அவளைப் பரிசோதிக்க நினைத்தார். எனக்கு விருப்பமான உணவு வகையைப் பரிமாற வேண்டும் என பைரவநாத் இச்சிறுமியிடம் கேட்டார்.
பைரவநாத்தின் சூட்சுமத்தையறிந்து கொண்ட சிறுமி, இங்கு அந்தணர்கள் உணவருந்துகிறார்கள். உனக்கு விருப்பமான மாமிச உணவைப் பரிமாற முடியாது எனக் கூறினார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிற்று. பைரவநாத் அச்சிறுமியின் கரத்தைப் பற்றினார். ஒரு நொடியில் சிறுமி மாயமாக மறைந்து விட்டாள். சிறுமி சென்ற வழியிலேயே குரு பைரவநாத் தேடிக் கொண்டே சென்றார். தனது தவவலிமையால் த்யானம் செய்து சிறுமி நடந்து சென்ற மலைப் பாதைகளைக் கண்டுபிடித்து நடந்து சென்றார்.
தெய்வீகச் சிறுமியின் சக்தி என்ன ? அவளது இருப்பிடம் எது ? என்பதைக் கண்டுபிடித்தே தீருவது என்ற தீர்க்கமான முடிவுடன் திரிகுடா மலைக் காடுகளில் அலைந்து கொண்டிருந்தார். பண்டிட் ஸ்ரீதரும் தெய்வீகச் சிறுமி சென்ற பாதையைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார். உணவு, உறக்கமின்றி பல இடங்களில் தேடி அலைந்தார். மாதங்கள் சில ஓடின. ஒருநாள் அயர்ந்து தூங்குகையில் தனது தலையை யாரோ தொடுவது போன்று உணர்ந்தார். தனது எதிரில் கைகளில் ஆயுதங்கள் தரித்து சிங்கவாகனத்தில் தேவி தோற்றமளித்தாள்.
பட்டினியோடு இருந்தால் எவ்வாறு எனக்குப் பூஜை செய்ய முடியும் எனப் பரிவோடு கேட்டாள். வா, எனது இருப்பிடத்தைக் காட்டுகிறேன் எனக் கூற, பண்டிதர் தேவி சென்ற வழியில் செல்ல அங்குள்ள ஒரு குகையினுள்ளே தேவி சர்வலங்கார பூஷணியாக பண்டிதருக்குக் காட்சியளித்தாள். பண்டிதரின் கண்களில் ஒரு பேரொளி வந்து மோத, திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்து, தனது கனவில் தேவி தோன்றி, அவனது இருப்பிடத்தைக் காட்டிய அவளது மகிமையைக் கண்டு அதிசயம் கொண்டார். பின் தேவி பிண்டம் ரூபத்தில் இருப்பதையும் உணர்ந்தார்.

குருநாதர் பைரவநாத் தனது தவவலிமையாலும் தயானத்தாலும் எவ்வளவு முயன்றும் தேவியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் அருகிலுள்ள குகையின் பக்கத்தில் ஒரு முனிவரைக் கண்டார், அம் முனிவரிடம் சென்று. ஞநான் ஒன்பது மாதங்களாக இக் காட்டில் திரிந்து கொண்டிருக்கிறேன். தெய்வீகச் சிறுமியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தக் குகையினுள்ளே இத்தனை மாதங்கள் அவள் ஒளிந்து கொண்டிருப்பது சாத்தியமா ? நான் குகைக்குள்ளே சென்று பார்க்கிறேன் என குகைக்குள்ளே செல்ல முற்பட்டார். முனிவர் பைரவநாத்திடம், நீ தேடி வந்தது மகாமாயா லோகநாயகி. அவளது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முயலாதே. உன்னை துன்பத்தில் ஆழ்த்தி விடும் என எச்சரித்தார்.
ஆனால் பைரவநாத்திற்கு தேவியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற உறுதியினால் குகைக்குள்ளே செல்ல முற்பட்டார். தேவி குகையின் மறுபுறத்தைப் பிளந்து கொண்டு பின்புறமாக மலைக்காட்டினுள்ளே சென்று விட்டாள். குரு பைரவநாத் தேவியைப் பின் தொடர்ந்து சென்றார். திரிகுடா மலையில் ஓர் அழகிய குகைக்கருகே தேவி நின்று கொண்டு, பைரவநாத்திடம், என்னை பின் தொடராதே, சென்று விடு என எச்சரித்தாள். பைரவநாத் தேவியின் பேச்சைக் கேட்க மறுத்து விட்டார்.
பைரவநாத் குகையினுள்ளே சென்றார். அதனால் கோபமுற்ற தேவி, சண்டா ரூபமெடுத்து தனது வாளால் பைரவநாத்தின் தலையை வெட்டி விட்டாள். குருநாதர் தவ வலிமை மிக்கவர் என்பதால், தலை வெட்டப்பட்ட பின்னும் அவரது ஆன்மா உயிருடன் பேசியது. பைரவநாத்தின் ஆன்மா தேவியிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டது. தனது செய்கையால், உலக மக்கள் தனக்கு அவப்பெயர் தந்து விடுவார்கள். என்னை மன்னித்து விடுங்கள் என உருகி வேண்டினார். உலக மாதாவும் அவரை மன்னித்தருளினாள்.
எனது இருப்பிடத்திற்கு வந்து பக்தர்கள் என்னை வழிபட்டபின் உனது இருப்பிடத்திற்கு வந்து உன்னை வணங்கினால்தான் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தியாகும். என வரம் தந்தாள். பைரவநாத் தலை விழுந்த இடமாததால் அவ்விடத்திற்கு பைரவ் – காட்டி என்ற பெயர் பெற்றது. பைஷ்ணவீ தேவியை தரிசித்த பின்னர், பைரவநாத் ஆலயம் வந்து அவரை வணங்கி நினைத்த வரம் பெற்றுச் செல்கின்றனர் பக்தர்கள். இச் சமயத்தில் பண்டித ஸ்ரீதர் மகாமாயா தனது கனவில் காட்சிதந்த குகையைத் தேடிச் சென்றார். ஆங்காங்கே த்யானத்தில் ஈடுபட்டு தேவியின் குகையைக் கண்டுபிடித்தார்.
அங்கே தேவி பிண்டம் ரூபத்தில் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். மாதா வைஷ்ணவி தேவிக்கு அழகிய குகைவாயிலில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் கடல் மட்டத்திலிருந்து 5,200 அடி உயரத்திலுள்ளது. குகைக் கோயிலின் நுழைவாயில் மிகக் குறுகலாக அமைந்துள்ளது. ஒருவர் குனிந்தே சென்று அம்மனை தரிசிக்க முடியும். குகையின் ஒரு மூலையிலிருந்து சரண் கங்கா என்ற புனித நீர் ஊற்று சுரந்து ஓடி வருகிறது. இப்புனித நீரே அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து, குறுகலான குகைவாயில் நெரிசல் ஏற்படுவதால், மற்றொரு குகை பாதை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. மாதா வைஷ்ணவிதேவியை தரிசித்து அருள்பெற்று பின், இப்புதிய குகை பாதை வழியாக திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதா வைஷ்ணவீ தேவியை மனமுருகி வேண்டினால், பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுகிறாள் அன்னை என எல்லோரும் பரிபூரணமாக நம்புகிறார்கள், “ஜெய் மாதா தி” (Jai Mata Di) என்ற ஒலி மலையெங்கும் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. பக்தர்கள் எழுப்பும் இவ்வொலி நமது செவிகளுக்குள் புகுந்து உடனே நமது உடல் சிலிர்த்து, நம்முன்னே புது தெம்பு பரவுவதை பரிபூரணமாக உணரலாம்.
சகல செல்வங்களை அள்ளித்தரும் வைஷ்ணவி தேவி மந்திரம்…!
மகாவிஷ்ணுவின் சக்தி சொரூபமாக ஆவிர்ப்பவித்த அருள்தான் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.
செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.

மந்திரம்:==
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்||
என்ற காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.
இந்தியாவில் திருப்பதிக்கு அடுத்து இந்த கோவிலிற்குதான் பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள்.
முப்பெரும் தேவியர்களும் சேர்ந்து அருள்பாளிக்கும் ஸ்தலம்
சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும், யோகிகளும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும் வாழ்ந்த வாழும் மண்.