
-
ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினராக வந்தவர் ஸ்ரீராமர். ‘ராம’ என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வந்ததினால்தான், ரத்னாகரன் என்ற வேடன் வால்மீகி மஹரிஷியாகப் பரிபக்குவமடைந்தார். இதை வால்மீகி முனிவரே,
‘ராமா த்வன் நாம மஹிமா வர்ண்யதே கேன வா கதம்
யத் ப்ரபாவாதஹம் ராம் ப்ரம்ம ரிஷித்வமவாப்தவான்’
- ராமா – ஏதொன்றினுடைய ஆற்றலால் யான் பிரும்ம ரிஷி நிலையை அடைந்தேனோ அத்தகைய உன் பெயரின் பெருமையை யாரால் விளக்க இயலும்? என்று கேட்கிறார்.
- ‘ராம நாமம் பஜரே மானஸ’ – ராமனின் பெயரையே நினைத்திரு மனமே! என்று தியாகப் பிரும்மமும் ராம நாமத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

- ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது ‘ராம’ நாமமே. எல்லாவித பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ‘ஸ்ரீராம நாமம்’.
- ஸ்ரீ ஆஞ்சநேயரின் அபரா அவதாரமாக மஹாராஷ்டிரத்தில் தோன்றிய மஹான் ‘ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் சுவாமிகள்’ மாருதியைப் ப்ரத்யட்சமாகக் கண்டு, அவர் மூலமாக சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று ‘த்ரயோதசாக்ஷரி’யான ‘ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ என்ற மஹா மந்த்ரத்தை உபதேசித்து பூமியெல்லாம் தழைக்கச் செய்தார்.
- மூன்று விஷயங்கள் உலகத்தில் அருமையானவை. அவை – மனிதப் பிறவி, மோட்ச விருப்பம், சத்குருவின் கிருபை. நற்குணமுள்ள நல்ல ஆத்மாவுக்குத்தான் குரு கடாட்சம் கிடைக்கும். ராம நாமாவினால் பலன் ஏற்பட வேண்டுமானால், உங்களுக்கு நம்பிக்கை அவசியம் இருக்க வேண்டும். ராமநாமாவை உச்சரிப்பதனால் ஏற்படும் சலனமானது, மனத்தை – ராஜஸ, தாமச குணங்களிலிருந்து சத்வ குணத்துக்கு மாற்றுகிறது.
- வியாதியைக் குணப்படுத்தும் மருந்தைப்போல், காந்திஜி அவர்கள் புண்ணிய நாமாவால் வியாதியைக் குணப்படுத்தும் முறைக்கு ‘நாமாபதி’ அல்லது ‘நாம தெரப்பி’ என்று கூறினார். அவரது மகன் மணிலால் ஒருமுறை டைபாய்ட் காய்ச்சலால் அவதிப்பட்டபோது, காந்திஜி அவர்கள் ஓர் ஈரத்துணியை எடுத்து அதிக உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக மணிலாலின் முன்நெற்றியில் வைத்து ‘ஸ்ரீராம’ நாமத்தை மிக ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்துக் குணமாக்கினார்