தை மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய புத்ரதா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்துப் பாவ விளைவுகளும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் மக்கள் புகழ் பெறுவர். இந்த மங்களகரமான ஏகாதசியின் பெருமைகளை கேள்.!
பத்ராவதி என்ற ஒரு நகரம் இருந்தது. அதனை சுகேதுமானா என்ற மன்னர் ஆண்டு வந்தார். அந்த மன்னரின் அரசியின் பெயர் சைவ்யா. அவர்களுக்கு ஒரு மகன் இல்லாததால் இருவரும் மிக்க துயரத்துடன் வாழ்க்கை நடத்தினர். மதச் செயல்களிலேயே அவர்கள் அதிக நேரத்தை செலவிட்டனர். அரசரும் அரசியும் மிகவும் துன்புற்று இருந்ததால், அவர்கள் தம் முன்னோர்களுக்கு நீர் படைக்கும் போது, அந்நீர் வெப்பமாகக் காணப்பட்டது. சுகேதுமானா மன்னருக்குப் பிறகு, தங்களுக்கு படையலை சமர்ப்பிக்க யாரும் இருக்கமாட்டார்கள். என எண்ணி மன்னரின் முன்னோர்களும் வருந்தினர். முன்னோர்களின் துயரத்தை அறிந்த மன்னரின் வருத்தம் மீண்டும் அதிகரித்தது. தன் நண்பர்கள், மந்திரிகள் ஆகியோரின் சகவாசத்தால் மன்னர் எந்தவொரு திருப்தியும் அடையவில்லை. நம்பிக்கை இழந்தவராய் புலம்பலுக்கு ஆளான மன்னர், ஒரு மகன் இல்லையேல் மனித வாழ்க்கை பயனற்றது என கருதினார். ஒரு மகன் இல்லையேல், தேவர்கள் முன்னோர்கள் மற்றும் மனித சமுதாயம் ஆகியோரின் கடனிலிருந்து ஒருவர் விடுபட முடியாது. புண்ணிய செயல்களிலும், பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டிலும் மிகுந்த அளவில் ஈடுபட்டாலொழிய ஒருவன் புத்திரபாக்கியம், செல்வம் மற்றும் அறிவை பெற இயலாது. இவ்வாறாக கருதிய மன்னர் தன் சுயநலனிற்காக ஒரு குதிரையில் ஏறி இரகசியமாக காட்டிற்கு சென்றார்.

சுகேதுமானா மன்னர், பறவைகளும் விலங்குகளும் நிறைந்த காட்டிற்குள் நுழைந்து, அங்கு இளைப்பாறுவதற்கான ஒரு இடத்தை தேட ஆரம்பித்தார். அந்த அடர்த்தியான காட்டில் மன்னர் சுகேதுமானா, ஆலமரம், ஈச்சமரம், தென்னை, பிபலா, ஷால், மவுளகிரி, சப்தபர்ணா, திலகா, தமலா, சரலா, ஹிங்கோடி, ஆர்ஜுனா லவேரா, பஹெதா, சல்லகி போன்ற பலவகையான மரங்களைக்கண்டார். புலி, சிங்கம், யானை, மான், காட்டுப்பன்றி, குரங்கு, பாம்பு, ஓநாய், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் கண்டார். இளைப்பாறுவதற்கு பதிலாக மன்னர் காட்டிற்குள் திரிய ஆரம்பித்தார். ஆந்தைகளின் அலறல்களையும் நரிகளின் ஊளையையும் கேட்ட மன்னர் திகைப்பும் ஆச்சர்யமும் அடைந்தார்.
இவ்வாறாக எல்லா திசைகளிலும் திரிந்து வந்த மன்னர் மிகவும் களைத்துப் போனார். அந்நேரம் நடுப்பகல் நேரமாதலால், மன்னர் மிகவும் தாகமடைந்தார். வழிபாட்டாலும் யாகங்களாலும் தேவர்களை திருப்திப்படுத்திய போதிலும் என்னுடைய சகாக்களை என் சொந்த பிள்ளைகளைப்போல் பராமரித்து வந்த போதிலும், உணவுப் பொருட்கள் மற்றும் தட்சணை கொடுத்து அந்தணர்களை திருப்திப்படுத்திய போதிலும், நான் இன்று இவ்வாறு துன்பப்படுகிறேனே என எண்ணினார். இந்த சிந்தனையில் மன்னர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருக்கையில் திடீரென மானஸ சரோவரைப் போன்ற ஒரு அழகிய குளத்தைக் கண்டார்.

அக்குளம் தாமரை மலர்களால் நிரம்பியிருந்தது. அன்னம் சக்ரவகா, சகோரா போன்ற பல பறவைகள் அக்குளத்து நீரில் விளையாடிக் கொண்டிருந்தன. அக்குளக்கரையில் சில முனிவர்கள் வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட மன்னர். குதிரையில் இருந்து கீழிறங்கி ஒவ்வொருவருக்கும் தனித் தனியே வணக்கங்களை சமர்ப்பித்தார். மன்னனின் நடத்தையில் திருப்தி அடைந்த முனிவர்கள் கேட்டனர்.

ஓ மன்னா; உன்னிடம் நாங்கள் திருப்தி அடைந்தோம். ஏதேனும் வரத்தைக்கேள். மன்னர் கூறினார். நீங்கள் அனைவரும் யார்? நீங்கள் ஏன் இந்த குளத்திற்கு வந்தீர்கள்? முனிவர்கள் பதிலளித்தனர். நாங்கள் விஸ்வ தேவர்கள், நாங்கள் குளிப்பதற்காக இங்கு வந்தோம். இன்று மங்களரமான புத்ரதா ஏகாதசி புத்திர பாக்கியம் வேண்டியாரேனும் இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால், நிச்சயமாக அவர் புத்திர பாக்கியம் பெறுவார். மன்னர் கூறினார். புத்திர பாக்கியத்திற்காக நான் பல வழிகளில் முயற்சித்தேன். ஆயினும் இன்றுவரை நான் வெற்றி பெறவில்லை. நீங்கள் அனைவரும் என்னிடம் திருப்தி கொண்டுள்ளதால், ஒரு அழகான மகனைப் பெற என்னை வாழ்த்துங்கள். முனிவர்கள் கூறினார். இன்று புத்ரதா ஏகாதசி, ஓ! மன்னா, நீ மிக கவனத்துடன் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். பிறகு பகவானின் கருணையாலும் எங்களின் வாழ்த்துக்களினாலும் நிச்சயமாக நீ ஒரு மகனைப் பெறுவாய்
அதன்பிறகு முனிவர்களின் அறிவுரைப்படி, மன்னர் மங்களரமான புத்ரதா ஏகாதசியை அனுஷ்டித்தார். மறுநாள் விரதத்தை முடித்த பிறகு முனிவர்களுக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்களை செலுத்திவிட்டு தன் அரண்மனைக்கு திரும்பினார். சில நாட்களில் அரசி சைவ்யா கருவுற்றாள். முனிவர்களின் வாழ்த்துக்களாலும், புத்ரதா ஏகாதசியை அனுஷ்டித்தன் பலனாகவும் மன்னர், புண்ணியமிகு மற்றும் ஒளிமயமான ஒரு மகனைப் பெற்றார். அதன் பிறகு மன்னர் மகிழ்ச்சியுடன் நாட்டை ஆண்டார். தன் முன்னோர்களும் திருப்தி அடைந்தனர். பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ, யுதிஸ்டிர மன்னா, இந்த புத்ரதா ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் புத்திர பாக்கியம் பெறுவதோடு சுவர்க லோகங்களை அடைவார். யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டாலோ, அல்லது பாடினாலோ, அவர் நிச்சயமாக அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார்