ஆருத்ரா நாளில்.. அற்புத தரிசனம் !
பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்தரகோசமங்கை.
இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார்.
உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். எனவேதான் இந்தத் தலம் திருஉத்திரகோச மங்கை என்று அழைக்கப்படுகிறது.
ஆலயத்தில் இறைவன் அருள்மிகு மங்களநாதர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்கிறார். அம்பிகை மங்களநாயகி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள்.

மங்களநாதர்
ராவணனுக்கும் மண்டோதரிக்கும் மங்கள வாழ்வு அருளியதால், இறைவன் மங்களநாதர் என்று திருப்பெயர் கொண்டதாகத் தலவரலாறு.=
முற்காலத்தில், ஆயிரம் முனிவர்கள் தவமியற்ற விரும்பி இந்தத் தலத்துக்கு வந்தனர். அவர்களுக்கு தரிசனம் தந்ததுடன், ஆகமங்களையும் உபதேசித்தார் மங்களநாதர்.
இந்த நிலையில், ராவணனின் மனைவி மண்டோதரியும் சிவ தரிசனம் காண விரும்பினாள். அவளுக்கு தரிசனம் தர விரும்பிய சிவனார், இலங்கையில் மண்டோதரி என் தரிசனம் காண விரும்புகிறாள். நான் அங்கு சென்று வருகிறேன். நான் வரும் வரை இந்த ஆகம நூல்களைப் பாதுகாத்து வாருங்கள். என் திருமேனியை ராவணன் தீண்டும்போது, இங்குள்ள தீர்த்தத்தில் அக்னிப் பிழம்பு தோன்றும். யாமே அந்த அக்னிப் பிழம்பு என்பதாக பாவித்து வழிபடுங்கள்’’ என்று கூறிமறைந்தார்.
இலங்கையில் மண்டோதரிக்கு தரிசனம் தந்து கொண்டிருந்த வேளையில், அங்கே ராவணன் வருவதை அறிந்து அழகிய குழந்தையாக மாறினார் சிவனார். ராவணன் குழந்தையை ஆசையுடன் தொட்டுத் தூக்கியபோது, உத்திரகோசமங்கை தீர்த்தக்குளத்தில் அக்னிப்பிழம்பு தோன்றியது.

அதைக் கண்ட முனிவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் திருக்குளத்தில் மூழ்கி மறைந்தனர். அவர்களுக்குத் தேவியுடன் காட்சி அருளிய சிவபெருமான், அவர்கள் அனைவரும் அந்தக் கோயிலில் லிங்கமாக இருக்கும்படியும், அவர்களுடன் தாமும் லிங்க உருவில் அருள்வதாகக் கூறினார்.
அக்னி பிழம்பு தோன்றிய போது, திருக்குளத்தில் மூழ்காமல் ஆகமங்களைப் பாதுகாத்த முனிவரே, பின்னர் இறையருளால் மாணிக்கவாசகராகத் தோன்றினாராம். அவருக்கு அக்னி தீர்த்தக் கரையில் தனிச் சந்நிதியும் உள்ளது.
ஆலயத்தின் சிறப்புகள்=
இந்த ஆலயத்தில் மங்களநாயகி திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தி காட்சி அருள்கிறாள்.
சித்திரை மாதம் நடைபெறும் மங்கள நாயகி திருக்கல்யாண உற்சவம் பிரசித்தி பெற்றது.
பொதுவாக சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்துவதில்லை. ஆனால், தாழம்பூ சாட்சியாக சிவபெருமானின் திருமுடியை தரிசித்ததாகப் பொய் கூறிய பிரம்மா, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு விமோசனம் பெற்றதால், இங்கு மட்டும் தாழம்பூ சிவபூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தலத்து இறைவனுக்குப் பிரளயாகேசுவரன், துரிதாபகன், காட்சி கொடுத்த நாயகன், கல்யாணசுந்தரன் ஆகிய திருப்பெயர்களும் வழங்கப்படுகின்றன.
இந்தத் தலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் நடராஜர் ஆதி சிதம்பரேசன் என்று போற்றப்படுகிறார். சுமார் ஆறு அடி உயரமுள்ள நடராஜர் மரகதக் கல்லினால் வடிக்கப்பட்டவர்.

நடராஜரின் மரகதத் திருமேனி மெல்லிய அதிர்வைக்கூடத் தாங்காது என்பதால், அவர் சந்நிதியில் மேள வாத்தியங்கள் இசைப்பதில்லை. மேலும் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடனேயே காட்சி தருவார். ஆருத்ரா அன்று மட்டும்தான் அவருடைய திருமேனி அழகை நாம் தரிசிக்க முடியும். அன்று மட்டும்தான் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அன்றிரவே மறுபடியும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டுவிடும். முதலில் களையப்பட்ட சந்தனத்தை பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தத் தலத்தில் அக்னி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பதும தீர்த்தம், சீதள தீர்த்தம், தேவி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
மாணிக்கவாசகர் பாடிய தலங்களில் முதன்மையான தலம் இது. திருவாசகத்தில் 38 இடங்களில் திரு உத்திரகோசமங்கை தலத்தைப் பாடியிருக்கிறார். கோயில் நடை சாத்தும்போது திருப்பொன்னூஞ்சல் மற்றும் நீத்தல் விண்ணப்பப் பதிகங்கள் பாடப்படுகின்றன.

மங்களநாதரை வழிபட்டால் முற்பிறவி பாவம், முன்னோர்களின் சாபம், ஜாதகத்தில் உள்ள தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கும். திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். குழந்தைப்பேறு, கல்வியில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ளது இந்தக் கோயில். (அதிகாலை 4 முதல் இரவு 10 மணி வரை ராமநாதபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.)
நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 4.30 முதல் பகல் 1 மணி வரை; மாலை 4 முதல் இரவு 8.30 மணிவரை.