
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 25 வது கிலோ மீட்டரில் கற்கத்தி என்ற நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். சீர்மலிந்து அழகு ஆர் செல்வம் ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே !’ என சம்பந்தர் பெருமான் போற்றிப் பாடிய தேவாரத் தலம் இது. அஷ்ட நாகங்கள் வழிபட்ட தலம். இந்தத் தலத்து இறைவன் பாம்புபுரநாதர், பாம்பீஸ்வரர், சேஷபுரீஸ்வரர் என பல பெயர்கள் தாங்கியுள்ளார். கோயில் எதிரே ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட ஆதிசேஷ தீர்த்தம் உள்ளது.

ராகுவும் கேதுவும் இங்கு ஏக சரீர ராகு – கேதுவாக, ஓருடலாக, இறைவனை வழிபட்ட கோலத்தில் தனி சந்நிதி கொண்டுள்ளனர். எனவேதான் இது ராகு – கேது இரண்டு தோஷங்களையும் களையவல்ல ஒப்பற்ற தலம் ஆகிறது. தலத்தின் பெயருக்கேற்ப அடிக்கடி திருக்கோயிலுக்குள் பாம்பு நடமாட்டம் இருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் தாழம்பூ மணம் வீசும்போது அதன் நடமாட்டத்தை நேரில் கண்டவர் பலர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை… எவரும் அறியாமல் நள்ளிரவில் வந்து, கருவறைக்குள் புகுந்து, மூலவர் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியவாறு எட்டடி நீளம் கொண்ட தனது சட்டையை உரித்து மாலையாக்கி அந்தப் பாம்பு வணங்கியது பரவசக் காட்சி. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், முதல் கால பூஜையின்போது வண்டார்குழலி அம்மன் மீது இதேபோல ஏழரை அடி நீளச் சட்டையை மாலையாக அணிவித்து, ஒரு பாம்பு வணங்கியதும் அதிசயக் காட்சியாக இருந்தது. ஆதிசேஷன் சிவராத்திரி இரவில் வழிபட்ட நான்கு தலங்களில் திருப்பாம்புரம் மூன்றாவது தலம்.
ஒரே இரவில் ஆதிசேஷன் வழிபட்ட தலங்கள் :
உலகையே தாங்கிடும் ஆதிசேஷன், பூமியின் பாரத்தை சுமக்க முடியாது நலிவுற்றபோது, தனது துயர் துடைக்குமாறு ஈசனை வேண்டினான். மகா சிவராத்திரி அன்று தன்னை நான்கு ஜாமங்களிலும் நான்கு தலங்களில் வழிபடுமாறு ஈசன் அருளினார். அந்த நான்கு தலங்கள் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் மற்றும் நாகூர்.
முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும் வழிபட்ட ஆதிசேஷன், மூன்றாம் ஜாமத்திற்கு தன் தோழர்களான காளகண்டேசன், கார்க்கோடகன், வாசுகி, நகுஷன் ஆகியோரையும் அழைத்துவந்து, திருப்பாம்புரத்தில் ஒரு தீர்த்தத்தையும் நிறுவி, பாம்புபுரநாதரை வழிபட்டான். அதன் பின்னர் நான்காம் ஜாமத்தில், நாகூர் நாகநாதரையும் வழிபட்டு பேறு பெற்றான். சிவராத்திரி இரவில் இந்த நான்கு திருத்தலங்களுக்கும் சென்று ஈசனை வழிபட்டு, சர்ப்ப தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.