
தமிழ்நாட்டில் ராகு தோஷத்திற்கான சிறப்புப் பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம்.ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் போன்ற நாகராஜர்கள் வழிபட்ட திருநாகேஸ்வரர் இங்கு சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார். இவர் நாகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள நாகராஜர் சந்நிதியே, ராகு பகவானாக தற்போது வழிபடப்படுகிறது. இருபுறமும் தேவியரோடு அமர்ந்துள்ள அவருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, பால் நீல நிறமாக மாறுவது அதிசயக் காட்சி. இவரை வணங்கினால் தங்கள் தோஷம் நீங்கப் பெறுவதாக உணர்கிறார்கள் மக்கள்.
ராகு கால நேரங்களில் பக்தர்கள் வரிசையாக அமர்த்தப்பட்டு, அவர்களுக்காக திருக்கோயில் மூலமாகவே பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குடந்தையிலிருந்து திருநாகேஸ்வரம் செல்ல நகரப் பேருந்துகள் நிறைய உள்ளன. ராகுஸ்தலம் என்ற பெயர்ப் பலகையோடு அவை செல்வதைக் காணலாம். கும்பகோணம், நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலும் ‘நாகேசம்’ என்று அழைக்கப்படுவதோடு, பிராகாரத்தில் நாகராஜர் சந்நிதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.