ஒரு தாவோ கதை….
ஒரு தாவோ குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் குரு கேட்டார். “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?”
- முதலாம் சீடன் சொன்னான். “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி. அது மிக எளிமையான வழியும் கூட.”
- இரண்டாம் சீடன் சொன்னான். “இத்தனை பெரிய வயலில் ஒவ்வொரு களையாக கையால் பிடுங்கிக் கொண்டிருந்தால் எப்போது அத்தனை களைகளையும் பிடுங்கி முடிப்பது. களை பிடுங்கும் உபகரணங்களை உபயோகப்படுத்தி களை பிடுங்கினால் குறுகிற நேரத்தில் நிறைய களைகள் பிடுங்கி விடலாம்.”
- மூன்றாம் சீடன் சொன்னான். ”களைகளைத் தீயால் கொளுத்தினால் ஒரேயடியாக அத்தனை களைகளையும் அழித்து விடலாம். அது தான் விரைவான எளிமையான வழி”
குரு சொன்னார். “இந்த வயல்வெளியே மனித மனம் என்றும், களைகள் அவனுக்குத் தேவையற்றதும், முன்னேற்றத்திற்கு உதவாததுமான தீய எண்ணங்கள் என்றும் எடுத்துக் கொண்டால் அப்போதும் நீங்கள் சொன்ன வழிகள் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?”
- முதல் சீடன் சொன்னான். “ஆம் குருவே. ஒவ்வொரு தீய எண்ணத்தையும் தனித்தனியாக கவனத்தில் எடுத்து அதன் தீய தன்மையையும், பலனற்ற தன்மையையும் புரிந்து கொண்டு அதை மனதில் இருந்து நீக்கி விடுவதே எளிமையான சிறப்பான வழி என்று நினைக்கிறேன்.”
- இரண்டாம் சீடன் சொன்னான். “மனதில் உள்ள தீய எண்ணக் களைகளை விரைவாக நீக்க தியானம், ஜபம், மந்திரங்கள் போன்ற உபகரணங்கள் சிறப்பாகப் பயன்படும் என்று நினைக்கிறேன் குருவே”.
- மூன்றாவது சீடன் சொன்னான். “புத்தர் அல்லது கடவுளர்களிடம் மனதை ஒப்படைத்தால் ஒரேயடியாக தீய எண்ணக் களைகள் கருகி விடும் என்று நான் நம்புகிறேன் குருவே”
குரு சொன்னார். “மூன்றுமே நல்ல வழிகள் தான். சிந்திக்க வேண்டிய வழிகள் தான். ஆனால் அவை தாவோ கண்ணோட்டத்தில் மிகப் பொருத்தமானது தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது” அதற்குப் பின் அவர் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சீடர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று நினைத்தாலும் குருவின் அங்கீகாரம் கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்தனர். சில மாதங்கள் சென்றன. குருவும் சீடர்களும் அதே பாதையில் இன்னொரு முறை வர நேர்ந்தது. களைகள் இருந்த வயல்வெளியில் விவசாயிகள் இப்போது நெற்பயிர் விளைவித்திருந்தார்கள்.
குரு அந்த நெற்பயிர் வயலைக் காட்டி சொன்னார். “இது தான் என் கேள்விக்குப் பதில். இது தான் தாவோ முறை”
சீடர்களுக்குப் புரியவில்லை. குரு விளக்கினார். “நீங்கள் மூவர் சொன்ன வழிகளும் தற்காலிகமான வழிகள். களைகளைப் பிடுங்கிய அளவு, அழித்த அளவு அவை மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டே இருக்கும். அதை நிரந்தரமாக அழிக்க ஒரே வழி அந்த வயலை அப்படியே வெற்றிடமாக வைத்திராமல் அதில் உபயோகமான பயிர்களை விதைப்பது தான்.”
”அதே போல் தீய எண்ணங்களை அழிப்பதற்கு நீங்கள் சொன்ன வழிகளும் தற்காலிகமானவை தான். எந்த வழியில் அழித்தாலும் காலி இடம் இருக்கும் வரை அவை திரும்பத் திரும்ப மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருக்கும் இடத்தில் நல்ல உபயோகமான எண்ணங்களை விதைப்பது தான் தாவோ முறைப்படி புத்திசாலித்தனமான பொருத்தமான செயல். அப்படிச் செய்தால், நல்லெண்ணங்கள் நிரம்பிய மனதில் தீய எண்ணங்கள் மீண்டும் எழ இடமே இருக்காது. அப்படியும் ஓரிரண்டு அங்கொன்றும் இங்கொன்றும் எழலாம் என்றாலும் அவற்றை நீக்குவது பெரிய கஷ்டமான காரியம் அல்ல.”
அந்த தாவோ குரு சொன்னது மனதில் பதியவைத்துக் கொள்ளது தக்கது. மனதில் தீயவற்றையும், பலவீனத்தையும் போக்க தினசரி போராட்டம் நடத்த அவசியம் இல்லை. சிந்தனைகளில் நல்லதையும், பயனுள்ளதையும் கொண்டு வருவதில் நாம் எல்லா சமயங்களிலும் உறுதியாக இருந்தால் தீயதும், பலவீனமும் தங்க நம் மனதில் இடமே இருக்காது;
லாவோட்சுவின் புத்தகம் பிறந்த கதை
இந்த சூத்திரம் எப்படி எழுதப்பட்டது என்பது பற்றிய ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன், ஏனெனில் அது இதைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். 90 வருடங்களாக லாவோட்சு வாழ்ந்தார் – உண்மையில் வாழ்வதைத் தவிர அவர் வேறொன்றையும் செய்வில்லை. அவர் முழுமையாக வாழ்ந்தார். பலமுறை அவரது சீடர்கள் அவரிடம் ஏதாவது எழுதலாமே என்று கேட்டபோதெல்லாம், “சொல்லக்கூடிய தாவோ உண்மையான தாவோ அல்ல, சத்தியம் எப்போது சொல்லப்படுகிறதோ அப்போதே அது அசத்தியமாக மாறிவிடுகிறது” என்பார். எனவே அவர் எதையும் சொல்லவில்லை, எதைப் பற்றியும் எழுதவும் இல்லை.
அப்படியானால் அவரது சீடர்கள் அவருடன் என்னதான் செய்தனர்? அவர்கள் அவருடன் சதா இருந்தனர் அவ்வளவே. அவர்கள் அவரோடு வாழ்ந்தனர், அவருடன் சென்றனர், அவரது இருப்பை அவதானித்தனர். அவர் அருகே இருப்பதன் மூலம் திறந்த மனதுடன் இருந்தனர்; அவர் அருகே இருப்பதன் மூலம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முயற்சித்தனர்; அவர் அருகே இருப்பதன் மூலம் மேலும் மேலும் மௌனமாக இருந்தனர். அந்த மௌனத்தில் அவர் அவர்களை அணுகினார், அவர்களிடம் வந்தார், அவர்களின் கதவுகளைத் தட்டினார்.
90 வருடங்களாக அவர் எதைப் பற்றியும் எழுதவில்லை, சொல்லவும் இல்லை. அவரின் அடிப்படை அணுகுமுறை இதுவே: சத்தியம் சொல்லக்கூடியது அல்ல. சத்தியத்தைப் பற்றி ஏதாவது சொல்லிய கணத்தில் அது அசத்தியம் ஆகிறது – அதைச் சொல்வதாலேயே அது பொய்யாகிறது. நீங்கள் அதைக் கற்பிக்க முடியாது. சொல்லப்போனால் அதைச் சுட்டிக்காட்டலாம், அந்தச் சுட்டுதல் உங்களின் இருப்பாக, முழு வாழ்க்கையாக ஆகலாம்;. ஆனால் வார்த்தைகளால் அதைச் சுட்டமுடியாது. அவர் வார்த்தைகளுக்கு எதிரானவர்; அவர் மொழிக்கு எதிரானவர்.
அவர் ஒவ்வொரு காலையிலும் நடைப்பயிற்சி செல்லும்போது, அவரது அண்டை வீட்டுக்காரரும் அவருடன் செல்வார். அவரை நன்றாகத் தெரிந்திருந்தும் லாவோட்சு அவருடன் பேசமாட்டார், அவர் முழுமையாக மௌனம் காப்பார். அவரைப் பற்றி நன்கு தெரிந்திருந்த அண்டை வீட்டுக்காரர் எப்போதும் அவருடன் மௌனமாகவே நடப்பார். “வணக்கம்” என்ற வார்த்தையைக் கூட லாவோட்சு அனுமதிக்கவில்லை, பருவ நிலை பற்றிய பேச்சைச்கூட அனுமதிக்கவில்லை. “இந்தக் காலை எவ்வளவு அழகானதாக இருக்கிறது” என்பதுகூட அதிகபட்ச பேச்சாகத் தெரிந்தது. லாவோட்சு நீண்ட தூரம், பல மைல் தொலைவு, நடக்க அண்டை வீட்டுக்காரரும் தொடருவார்.
இப்படியாக வருடங்கள் பல கழிந்தன ஆனால் ஒரு முறை அண்டை வீட்டுக்காரரின் உறவினர் ஒருவர் வந்திருந்தார். அவர் விருப்பப்படவே அண்டை வீட்டுக்காரர் அவரையும் நடைப்பயிற்சிக்கு உடன் அழைத்து வந்தார். உறவினருக்கு லாவோட்சுவைப் பற்றித் தெரியாதாகையால், இவர்கள் ஏன் பேசிக்கொள்ளவில்லை என்பது புதிராக இருந்தது – அந்த மௌனம் பாரமானதாக, அவரை மூச்சுத்திணரடிப்பதாக இருந்தது.
நீங்கள், எப்படி மௌனமாக இருப்பது என்பதை அறியாதபோது, அது பாரமாகவே இருக்கும். பேசுவதன் மூலமாகவே பரிமாறிக்கொள்ள முடியும் என்பதில்லை. பேசுவதனால் உங்களை பாரமற்றவர்களாகச் செய்துகொள்கிறீர்கள். உண்மையில், வார்த்தைகளால் பரிமாறிக்கொள்வது முடியாத ஒன்று – மாறாக அதற்கு எதிரானதன் மூலம் முடியலாம் – பரிமாறிக்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலமாக. நீங்கள் பேசும்போது உங்களைச் சுற்றி வார்த்தைகளால் ஒரு திரையை உருவாக்குகிறீர்கள் எனவே உங்களின் உண்மை நிலையை பிறர் அறிய முடியாமல் போகிறது. நீங்கள் வார்த்தைகளால் ஆன ஆடையால் உங்களை மூடிக்கொள்கிறீர்கள்.
அந்த உறவினர் தான் நிர்வாணமாக, மூச்சுத் திணறுவதாக, பைத்தியக்காரத் தனமாக இருப்பதாக உணர்ந்தார். எனவே சூரியன் உதித்தபோது, “பாருங்கள்! எவ்வளவு அழகான சூரியன் பிறந்து எழுகிறது! என்ன ஒரு அழகான காலைப் பொழுது” என்றார்.
அவர் சொன்னது அவ்வளவே. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை; ஏனெனில் அண்டை வீட்டுக்காரருக்குத் தெரியும் லாவோட்சு இதை விரும்பமாட்டார் என்று. உண்மையில் லாவோட்சு ஒன்றுமே சொல்லவில்லை, பதிலளிக்கவில்லை. அவர்கள் திரும்பிய பிறகு, லாவோட்சு அண்டை வீட்டுக்காரரிடம், “நாளையிலிருந்து அந்த மனிதரைக் கூட்டிவர வேண்டாம். அவர் ஒரு பேசும் பெட்டி” என்றார். அந்த உறவினர், “என்ன அழகான சூரியன்; என்ன அழகான காலை” என்று மட்டுமே சொன்னார். இரண்டு மூன்று மணி நேர நடையில் பேசப்பட்டது இவ்வளவே ஆனால் அதற்கே லாவோட்சு, “அந்தப் பேசும் பெட்டியை உங்களுடன் அழைத்துவர வேண்டாம். அவர் அதிகம் பேசுகிறார். தேவையில்லாமல் பேசுகிறார். எனக்கும் கண்கள் உள்ளன, நான் சூரியன் உதிப்பதையும் அதன் அழகையும் பார்க்கவே செய்கிறேன். எனவே அதைச் சொல்வதில் என்ன தேவை இருக்கிறது?” என்றார்.
லாவோட்சு மௌனத்தில் வாழ்ந்தார். அவர் எப்போதும் தான் அடைந்த சத்தியத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே வந்தார். மேலும் தனது வருங்கால சந்ததிக்காக அவற்றை எழுதிவைக்கும் யோசனையையும் அவர் நிராகரித்தார்.
தனது 90வது வயதில் தனது சீடர்களிடமிருந்து விடைபெற்றார். அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்து, “நான் தற்போது மலையை நோக்கி, இமயமலைக்குச் செல்கிறேன். நான் அங்கே சென்று இறப்பதற்குத் தயாராகிறேன். மனிதர்களுடன் வாழ்வது நல்லது, வாழும்போது இந்த உலகத்தில் இருப்பது நல்லது ஆனால் ஒருவர் இறப்பின் அருகாமையை நெருங்கும்போது தனிமையை நாடிச்செல்வது நல்லது. இந்த உலகத்தால் மாசுபடாத, முழுமையான தனிமையை நோக்கி செல்வது நல்லது” என்றார்.
அவரது சீடர்கள் மிகவும் துன்பமடைந்தார்கள் ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியம்? அவர்கள் அவரைச் சில மைல் தூரம்வரை தொடர்ந்து சென்றனர், லாவோட்சு அவ்வப்போது அவர்களைத் திரும்பிச் செல்லுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் மட்டும் எல்லையைக் கடந்து போக முயற்சித்த போது அதன் காவலாளி அவரைச் சிறை வைத்தான். அந்தக் காவலாளி அவரது சீடர்களில் ஒருவன். “நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதாதவரை நான் உங்களை எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்க மாட்டேன். இதையாவது நீங்கள் மனித குலத்திற்குச் செய்யத்தான் வேண்டும். புத்தகம் ஒன்றை எழுதுங்கள். அதுவே நீங்கள் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வழி, இல்லாவிடில் நான் உங்களை போகவிட மாட்டேன்” என்றான். எனவே லாவோட்சு மூன்று நாட்களாக அவரின் சீடரால் சிறை பிடிக்கப்பட்டார்.
அது அழகானது. அது அன்பானது. அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் – அதானாலேயே, அந்த சிறிய புத்கதம், லாவோட்சுவின் புத்தகம், Tao Te Ching பிறந்தது. அவர் தனது சீடன் எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்காததால் அந்தப் புத்தகத்தை எழுத நேரிட்டது. அந்தக் காவலாளி தனக்கிருந்த அதிகாரத்தால், சிக்கலை ஏற்படுத்தியதால், லாவோட்சு புத்தகத்தை எழுதவேண்டியிருந்தது. மூன்று நாட்களில் அவர் அதை எழுதி முடித்தார்.