சர்ப்ப தோஷம் போக்கிடும் நாதன் !!ஜாதகத்தில் பலரையும் கவலையில் ஆழ்த்துவது சர்ப்ப தோஷம். வம்ச விளக்கேற்றிட ஒரு சந்ததியைப் பெற்றிட நினைக்கும்போது, சர்ப்ப தோஷம் தடையாக இருந்து வேதனைப் படுத்துகிறது.
இப்படி தோஷத்தில் சிக்கிய அடியவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு இறைவன் பொறுப்பானா? சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்திட பல வழிகளைக் காட்டுகிறார் எம்பெருமான். தமிழகத்தில் சர்ப்ப தோஷ நிவாரணத் தலங்கள் பல உண்டு. இங்கெல்லாம் அருள்பாலிக்கும் அவரை வழிபட்டால் தோஷம் நீங்கி, சந்தோஷம் நிலைத்திடும். ராமேஸ்வரம் போன்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று நாகப்பிரதிஷ்டை செய்வதும் ஒரு முறை. பரிகாரத் தலங்களுக்குச் சென்று எளியமுறையில் பரிகாரங்களைச் செய்தும் பயன் அடையலாம்.
கால சர்ப்ப தோஷம்:

அது தவிர, ஐந்தாம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தால், அது புத்திர தோஷமாகக் கருதப்படுகிறது. ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்வது களத்திர தோஷம். ‘தோஷம் இருக்கிறவர்களுக்கு ஆயுட் காலத்தில் முற்பகுதியில் தோஷமும் சோதனையுமாக அமையும். வாழ்க்கையின் பிற்பகுதி நல்ல முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பரிகாரத் தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கி, சோதனைகளை சமாளிக்கலாம்.
திருநாகேஸ்வரம்:

தமிழ்நாட்டில் ராகு தோஷத்திற்கான சிறப்புப் பரிகாரத் தலமாக விளங்குவது கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம். ஆதிசேஷன், தக்ஷன், கார்க்கோடகன் போன்ற நாகராஜர்கள் வழிபட்ட திருநாகேஸ்வரர் இங்கு சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார். இவர் நாகநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள நாகராஜர் சந்நிதியே, ராகு பகவானாக தற்போது வழிபடப்படுகிறது. இருபுறமும் தேவியரோடு அமர்ந்துள்ள அவருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, பால் நீல நிறமாக மாறுவது அதிசயக் காட்சி. இவரை வணங்கினால் தங்கள் தோஷம் நீங்கப் பெறுவதாக உணர்கிறார்கள் மக்கள்.
ராகு கால நேரங்களில் பக்தர்கள் வரிசையாக அமர்த்தப்பட்டு, அவர்களுக்காக திருக்கோயில் மூலமாகவே பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குடந்தையிலிருந்து திருநாகேஸ்வரம் செல்ல நகரப் பேருந்துகள் நிறைய உள்ளன. ராகுஸ்தலம் என்ற பெயர்ப் பலகையோடு அவை செல்வதைக் காணலாம். கும்பகோணம், நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலும் ‘நாகேசம்’ என்று அழைக்கப்படுவதோடு, பிராகாரத்தில் நாகராஜர் சந்நிதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காளஹஸ்தி:

ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு அருகில் உள்ள காளஹஸ்தியும், ராகு – கேது தோஷ பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.
திருப்பாம்புரம்

கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 25 வது கிலோ மீட்டரில் கற்கத்தி என்ற நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம். சீர்மலிந்து அழகு ஆர் செல்வம் ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே !’ என சம்பந்தர் பெருமான் போற்றிப் பாடிய தேவாரத் தலம் இது. அஷ்ட நாகங்கள் வழிபட்ட தலம். இந்தத் தலத்து இறைவன் பாம்புபுரநாதர், பாம்பீஸ்வரர், சேஷபுரீஸ்வரர் என பல பெயர்கள் தாங்கியுள்ளார். கோயில் எதிரே ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட ஆதிசேஷ தீர்த்தம் உள்ளது.

ராகுவும் கேதுவும் இங்கு ஏக சரீர ராகு – கேதுவாக, ஓருடலாக, இறைவனை வழிபட்ட கோலத்தில் தனி சந்நிதி கொண்டுள்ளனர். எனவேதான் இது ராகு – கேது இரண்டு தோஷங்களையும் களையவல்ல ஒப்பற்ற தலம் ஆகிறது. தலத்தின் பெயருக்கேற்ப அடிக்கடி திருக்கோயிலுக்குள் பாம்பு நடமாட்டம் இருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் தாழம்பூ மணம் வீசும்போது அதன் நடமாட்டத்தை நேரில் கண்டவர் பலர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை… எவரும் அறியாமல் நள்ளிரவில் வந்து, கருவறைக்குள் புகுந்து, மூலவர் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியவாறு எட்டடி நீளம் கொண்ட தனது சட்டையை உரித்து மாலையாக்கி அந்தப் பாம்பு வணங்கியது பரவசக் காட்சி. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், முதல் கால பூஜையின்போது வண்டார்குழலி அம்மன் மீது இதேபோல ஏழரை அடி நீளச் சட்டையை மாலையாக அணிவித்து, ஒரு பாம்பு வணங்கியதும் அதிசயக் காட்சியாக இருந்தது. ஆதிசேஷன் சிவராத்திரி இரவில் வழிபட்ட நான்கு தலங்களில் திருப்பாம்புரம் மூன்றாவது தலம்.

ஒரே இரவில் ஆதிசேஷன் வழிபட்ட தலங்கள்: உலகையே தாங்கிடும் ஆதிசேஷன், பூமியின் பாரத்தை சுமக்க முடியாது நலிவுற்றபோது, தனது துயர் துடைக்குமாறு ஈசனை வேண்டினான். மகா சிவராத்திரி அன்று தன்னை நான்கு ஜாமங்களிலும் நான்கு தலங்களில் வழிபடுமாறு ஈசன் அருளினார். அந்த நான்கு தலங்கள் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் மற்றும் நாகூர்.
முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும் வழிபட்ட ஆதிசேஷன், மூன்றாம் ஜாமத்திற்கு தன் தோழர்களான காளகண்டேசன், கார்க்கோடகன், வாசுகி, நகுஷன் ஆகியோரையும் அழைத்துவந்து, திருப்பாம்புரத்தில் ஒரு தீர்த்தத்தையும் நிறுவி, பாம்புபுரநாதரை வழிபட்டான். அதன் பின்னர் நான்காம் ஜாமத்தில், நாகூர் நாகநாதரையும் வழிபட்டு பேறு பெற்றான். சிவராத்திரி இரவில் இந்த நான்கு திருத்தலங்களுக்கும் சென்று ஈசனை வழிபட்டு, சர்ப்ப தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.
கால சர்ப்பதோஷ நிவாரணத் தலங்கள்:
காஞ்சிபுரம்:
காமாட்சியம்மன் கோயிலின் வடக்கு வாயில் அருகில் உள்ள மகா காளேஸ்வரர் கோயில். மகா காளன் என்ற கொடிய நாகம், சிவனை வழிபட்ட தலம்.

திருமாகாளம் கோயில்:

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில், பூந்தோட்டத்துக்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது மகா காளநாதர் கோயில்.
காட்டாங்குளத்தூர்:

சென்னை – செங்கல்பட்டு சாலையில் வண்டலூரை அடுத்துள்ளது. காளத்தீஸ்வரர் கோயில். இது, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், காளஹஸ்திக்கு இணையான தலம்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம், கம்பம் செல்லும் பாதையில் உள்ள ஊர். காளத்திநாதர் – ஞானாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.
ஆம்பூர்:

வேலூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு வடக்கே 18 கி.மீ. பாம்புப் புற்றில் சுயம்புலிங்கமாகத் தோன்றியதால் இறைவன் நாகரத்தின சுவாமி என்று திருநாமம் கொண்டுள்ளார்.
நாகபுடி:

சோளிங்கருக்கு மேற்கில் 12 கி.மீ. சுயம்பு மூர்த்தியாக நாகநாத ஈஸ்வரர், நாகவல்லி அருள்பாலிக்கும் தலம்.
நாகூர்:

நாகப்பட்டினத்துக்கு வடக்கே 4 கி.மீ. ஆதிசேஷன் வழிபட்ட நான்கு தலங்களில் ஒன்று. நாகநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம்.
கீழப்பெரும்பள்ளம்:

நாகை மாவட்டம், பூம்புகார் அருகில் உள்ள தலம். கேது பரிகாரத் தலம் என்று புகழ்பெற்றது. நாகநாதர் திருத்தலம்.
பேரையூர்:

புதுக்கோட்டை – பொன்னமராவதி சாலையில் அமைந்த திருத்தலம். நாகநாத சுவாமி.
நயினார்கோயில்:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள தலம்.
இருளாஞ்சேரி:

சென்னைக்கு மேற்கில் கடம்பத்தூர் அருகில் 8 கி.மீ. தொலைவில் காளிங்கேச நாதர் அருள்பாலிக்கும் தலம்!