ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு அருகில் உள்ள காளஹஸ்தி, ராகு – கேது தோஷ பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.
தல சிறப்பு :
ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த காளஹஸ்தீஸ்வரர் கோயில் முக்கியமான சைவத்திருத்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது. திருப்பதியிலிருந்து 36 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த கோயில் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய ‘வாயு’விற்காக எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தை கொண்டுள்ளது. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் சிவனின் வடிவமாக காளஹஸ்தீஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறது. புராணக்கதைகளின்படி பக்த கண்ணப்பர் இந்த கோயில் ஸ்தலத்தில் ஆதியில் வீற்றிருந்த லிங்கத்துக்கு (சிவனுக்கு) தனது கண்ணையே அர்ப்பணித்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது இவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவனின் பரிட்சையில் இவரது மூர்க்கமான பக்தி நிரூபிக்கப்பட்டதாக இந்த கதை விளக்குகிறது. பின்னர் சிவபெருமான் கண்ணப்பர் முன் பிரத்யட்சமாகி அருளியதாகவும் புராணம் கூறுகிறது. இந்த கோயில் இரண்டு அங்கங்களை கொண்டுள்ளது. இதன் உட்புறம் 5ம் நூற்றாண்டிலும், வெளிப்புற அமைப்பு 12ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டுள்ளது. நாம் வெளிப்புறத்தில் காணும் எல்லா அமைப்புகளும் சோழ மன்னர்கள் காலத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழர்களால் கட்டுவிக்கப்பட்டதாகும். எனவே இந்த கோயிலின் கோபுரத்தோற்றம் மற்றும் இதர கட்டமைப்புகள் சோழர்கால கோயிற்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன. சிவபெருமானை வழிபடுவதற்காக மட்டுமல்லாமல், ராகு மற்றும் கேது தொடர்புடைய ஜாதக தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு பக்தர்கள் விசேஷ பூஜைகள் செய்ய வருகை தருகின்றனர். பெரும்பாலும் திருப்பதிக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருமே காளஹஸ்திக்கும் விஜயம் செய்து இந்த காளஹஸ்தீஸ்வரரை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ராகு கேது பரிகார பூஜை :

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், உடனடியாக திருமணம் ஆவதற்காகவும், குழந்தைப் பேறு கிடைப்பதற்காகவும் ராகு கேது பூஜை செய்யப்படும். ஆந்திராவில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி கோவில் திருப்பதியில் இருந்து, 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இங்கு, ராகு, கேது தோஷம் காரணமாக, திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் நாக பிரதிஷ்டை பூஜை என்பதை செய்வது வழக்கம். இதைச் செய்வதால், நீண்ட காலமாக தடைபட்டு வரும் திருமணம் உடனடியாக நடந்தேறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.