கடவுளை நெருங்க நேர்மையான ஒருவரால் மட்டுமே முடியும். நேர்மையில்லாத ஒருவர் எவ்வளவுதான் அன்பு செலுத்தினாலும் அது கடவுளை ஈர்ப்பதில்லை.சுய வாழ்வில் நாம் எவ்வளவு நேர்மையோடு இருக்கின்றோமோ அவ்வளவு மனம் சுத்தமாகும்.மனம் சுத்தமானால் தான் அது இறைவனிடம் ஈடுபடும்.உலகில் சுத்தமில்லாத மனமானது நேர்மையற்றவர்களுடையது. எண்ணம் சுத்தமில்லாத இடத்தில் எதுவும் சுத்தமிருக்காது.இறைவனுக்கு பிடித்ததோ
உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாத மனம்.கடவுளின் நெருக்கம் யாரிடம் அதிகமாகும் யார் எண்ணம்,சொல், செயலில் முழுமையான தூய நிலையில் இருப்பார்களோ அவர்களிடம். இவர்கள் தான் இந்த உலகில் நேர்மையானவர்கள் கூட. நீங்கள் நேர்மையானவர் என்பதை இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் கட்டுப்பாட்டின் மூலம் வெளிப்படுத்தவேண்டும். இப்படி வைராக்கியம் உடைய ஒருவரிடத்தில் தான் கடவுளின் நெருக்கம் அதிகமாகின்றது.நேர்மை என்பதை தவறிழைக்காமை என்றும் சொல்லலாம். எப்படிப்பட்ட சூழ்நிலை வரும் பொழுதும் அசையாத தன்மையே நேர்மை என்று சொல்லப்படுகின்றது. எங்கே அசைவு வருகின்றதோ அதை சலனம் அல்லது சபலம் எனலாம்.அந்த அசைவு தனது பலவீனத்தால் ஏற்படுகின்றது. பலவீனமானவர் நேர்மையான ஒருவர் என்ற வார்த்தைக்கு அப்பாற்பட்டவர். நேர்மை என்பதன் முழு அர்த்தமே பாவத்திற்கு அப்பாற்பட்டவர் என பொருள்படும்.நேர்மை நிறைந்த ஒருவருக்கே இறைவனிடம் நெருங்கிய நிலையில் வருவதற்காக சோதனைகள் வருகின்றன. அந்த சோதனையில் தனது சத்தியத்தின் துணையுடன் வெற்றி பெறுபவருக்கே இறைவனுடன் நெருக்கம் அதிகமாகின்றது. ஏனென்றால் உள்ளுக்குள் சத்தியம் இருந்த காரணத்தினால் தான் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். சத்தியத்தை நேர்மையுடன் நிலைநாட்ட அவருக்கு சகிப்புத்தன்மையுடன் மனவுறுதி தேவைப்பட்டுள்ளது. மனஉறுதி எப்படி வந்தது நான் நேர்மையானவனாக சத்தியம் உள்ளவனாக வாழ்ந்திருக்கிறேன். எனவே, எந்தவொரு காலகட்டத்திலும் இறைவனான தந்தை ஈசனுடைய துணை கட்டாயமாக எனக்கிருக்கின்றது என்று பரிபூர்ணமாக நம்பியதால். எப்பொழுது நேர்மையாக நடந்து இறைவன் மேல் ஒருவர் நம்பிக்கை வைக்கின்றாரோ அவருடைய நம்பிக்கையைஇறைவன் வீணாக்குவதில்லை. ஒருபுறம் பாவமும் செய்துகொண்டும் இன்னொருபுறம் கடவுளே கடவுளே என்று சொல்பவரின் நம்பிக்கைதான் வீணாகின்றது. எனவே, இறைவனிடம் நெருங்க விரும்பும் ஒருவர் முதலில் தனது நேர்மை என்ற அஸ்திவாரத்தை உறுதியாக்கவேண்டும்.
நேர்மையுடன் அன்பாகவும் அனைத்து உயிர்களையும் மதிக்க தெரிந்திருத்தல் வேண்டும். நேர்மையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் புண்ணிய காரியங்களை தொடர்ந்து செய்யவேண்டும்.ஏனென்றால் நேர்மையாக இருப்பதால் சுய வாழ்வில் தூய்மை இதனால் தன்னுடைய மனம் மகிழ்வடையும்.ஆனால் தர்மத்தின் படி நிலைத்திருந்து பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்பவருக்கு இறைவனின் அருட்பார்வை கிட்டும். புண்ணிய காரியங்கள் செய்பவரை கண்டால் தந்தை ஈசன் நிறைவாக மகிழ்வடைகின்றார். நான் நேர்மையாக இருக்கின்றேன் என புண்ணிய காரியங்களே செய்யாமல் இருந்தால் அதில் எந்தவொரு லாபமும் இல்லை. ஒரு பக்கம் பாவமும் செய்து கொண்டு இன்னொரு பக்கம் புண்ணியம் செய்கின்றேன் என்று சொன்னால் அதனாலும் பெரிய லாபமில்லை. எனவே, வாழ்வில் ஒருவர் நேர்மையாக நடந்து அன்புடன் இருந்து தனது வாழ்வில் இறை தொன்றாட்டி தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வாழ்வோரே இறைவனிடத்தில் நெருங்கமுடியும். இவர்களையே இறைவனும் நெருங்கி வருவார். வாழ்த்துக்கள்.