திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் (உப்பிலியப்பன்) கோவில், கும்பகோணம்
பூலோகத்திலிருந்தேசொர்க்கத்தை தரிசிக்கலாம் என்று சொன்னால் யாரும் முதலில் நம்ப மாட்டார்கள். ஆனால் பகவான் நமக்கு தரிசனம் கொடுப்பதற்காகவே பெரும்பாலும் பூலோகத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து விடுகிறார் என்பது பொய்யல்ல. ஆண்டாண்டு காலமாய் நடக்கின்ற அற்புதமான நிகழ்ச்சி. குறிப்பாக காவிரிக்கரையில் 40 கோயில்களை தனக்காக உருவாக்கிக் கொண்டு அருள் பாலித்து பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்து வருகிறார் என்பது வரலாற்று உண்மை.
கைப்பிடித்த நாயகிக்காக உப்பு இல்லாமலே இன்றைக்கும் உண்டு வரும் உப்பிலியப்பன் தரிசனம் வாழ்க்கையில் எளிதில் கிடைக்காத பெரும் பேறாகும்.

கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் கிழக்கே அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருவிண்ணகர் உப்பிலியப்பன் திருக்கோயிலுக்கு மார்க்கண்டேயர் சேத்திரம், செண்பகவனம், ஆகாச நகரம் என்று வேறு பெயர்களும் இதற்கு உண்டு. ஐம்பது அடி உயர ஐந்து நிலை கோபுரம், தல விமானம் சுத்தானந்த விமானம். தல தீர்த்தம் ஆர்த்தி புஷ்கரணி. ஆலயத்திற்கு வெளியே சங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் உள்ளது. கருடன், காவிரி, தர்ம தேவதை மார்க்கண்டேயருக்கு எம்பெருமான் காட்சி தருகிறார். பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன் என்று வேறு பெயர்களும் பெருமாளுக்கு உண்டு. பூமிதேவி இறைவனுக்கு வலப்புறம் கீழே மண்டியிட்டு வணங்கும் கல்யாண கோலத்தில் இருக்கிறார்.

மிருகண்டு முனிவரின் புதல்வர் மார்க்கண்டேயர், முன்பொரு சமயம் பெருமாளை நோக்கி தவம் செய்ய வந்தார். அவருக்கு பூமிதேவி மகளானாள். திருமண வயதை அடைந்ததும் அவளுக்கு மணம் செய்ய மார்க்கண்டேயர் முயன்ற பொழுது, எம்பெருமானே மார்க்கண்டேயரிடம் வயதானவராக வந்து பூமிதேவியை பெண் கேட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மார்க்கண்டேயர், “நீங்களோ வயதானவர் என் மகளோ சின்னஞ் சிறியவள். அவளுக்கு சமைக்கக் கூடத் தெரியாது. மறந்து உணவில் உப்புப் போடத் தவறினால், தாங்கள் சினம் கொண்டு என் மகளைச் சாபம் இட்டு விடுவீர்கள்” என்று பெண் கொடுக்க மறுத்தார்.
பகவானோ விடாப்பிடியாக “உங்கள் மகளுக்கு சமைக்க தெரியாவிட்டாலும் பரவாயில்லை உப்பில்லாமல் சமைத்தால் கூட நான் விரும்பி ஏற்றுக் கொள்வேன்” என்று பிடிவாதம் பிடிக்க மார்க்கண்டேயர் நிலை கொள்ளாமல் தவித்தார். யார் இவர்? எதற்காக இப்படி பிடிவாதம் பிடிக்கிறார்? என்பதை அறிய சிவபெருமானை நினைத்து வேண்டினார். அப்பொழுது சிவபெருமான் மார்கண்டேய முனிவரிடம் ” வந்திருப்பது மகாவிஷ்ணு” என்று சொல்ல மார்க்கண்டேயர் தன் மகள் பூமாதேவியை விஷ்ணுவுக்கு மணமுடித்து வைத்தார்.
உப்பில்லாத உணவை நாம் ஏற்போம் என்று சொன்னதால் இதுவரை உப்பில்லாத உணவை பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார்ஆகியோர் பாசுரம் செய்திருக்கின்றனர். வைகுண்டத்திற்கு சமமான ஸ்தலம் வடவேங்கடம் செல்ல இயலாதவர்கள் இந்த வேங்கடவனுக்கு செய்து கொண்ட பிரார்த்தனைகளை செலுத்தலாம்.
பரிகாரம்
வெகுநாட்களாக முயற்சி செய்தும் திருமணமாகாதவர்கள் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் திருமணமும் நல்லபடியாக, சீக்கிரமே நடந்துவிடும். வாழ்க்கையில் எங்கு தேடியும் நிம்மதி கிடைக்காதவர்கள் இந்த பெருமாளுக்கு பிரார்த்தனை செய்து அபிஷேக ஆராதனை செய்தால் முன் ஜென்ம பாவத்தை நீக்கி கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும். கோடி தீப விளக்கிற்கு தங்களால் இயன்ற காணிக்கை செய்தால் பட்டுப்போன தொழில், குடும்பம் நல்லபடியாக செழித்து வரும் என்பது இத்தலத்திற்குரிய சிறப்பு.

திருமால் பூமாதேவியை பிரம்மன் முன்னிலையில் தேவர்கள் அனைவரும் கூடி நிற்க இந்த துளசி வனத்தில் ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். இத்தலத்திற்கு வந்து ஸ்ரீனிவாசனை சரணடைந்தோர் அவரது அருளை பரிபூரணமாய் பெறுவது திண்ணம். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ளது அஹோத்ர புஷ்கரணி என்ற பொய்கை. வத தேவ சர்மா என்ற அந்தணர், ஜைமினி முனிவரின் சாபம் பெற்று பறவையாக இங்குள்ள மரத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் புயல் காற்றில் மரக்கிளை முறிந்து, இந்த பொய்கையில் விழுந்ததில் அவரது சாபம் நீங்கியது. இந்த பொய்கையின் முற்புறத்தில் உள்ள துளசி செடியின் அடியில் அமர்ந்து பிறருக்கு அன்னமளிப்பவன் தனது சாபங்கள் அனைத்தும் நீங்கப்பெறுகிறான். செவ்வாய், வெள்ளி, சனிக் கிழமைகளில் திருவோண நட்சத்திரம் போன்ற நாட்களில் இந்த திருக்குளத்தில் நீராடி பெருமாளை தரிசிப்பவர் வைகுந்தம் செல்வதாக ஐதீகம். சாரங்க தீர்த்தம், சூரிய தீர்த்தம், இந்திர தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்கள் கோவிலில் உள்ளன.
ஒப்பிலியப்பனை துளசியால் அர்ச்சிப்பவர், ஒவ்வொரு இதழுக்கும் அசுவ மேத யாகம் செய்த பலனை அடைகிறார். சந்தனம், குங்குமம், பூ இவற்றை சமர்பிப்பதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடு கிறார்கள். ஆடை, அணிகலன்களை சமர்ப்பிப்பவர்கள் பாவ விமோசனம் பெறுகின்றனர். புரட்டாசி அல்லது பங்குனி சிரவனத்தன்று காலையில் புஷ்கரணியில் நீராடி, தானங்களை செய்பவர்கள் பாவங்கள் அகன்று போகும்.
சிரவண விரதம் :
ஒவ்வொரு மாதமும் சிரவணத் திருநாளில் பகல் 11 மணிக்கு சிரவண தீபம் தரிசனம் செய்யலாம். இத்திருநாளில் விரதம் இருந்து நீராடி, உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர், அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். பக்தர்கள் இந்த விரதத்தை தங்களது வீடுகளிலும் கடைப்பிடிக்கலாம். குருவாயூரைப் போன்று இங்கும் துலாபாரம் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உப்பு தவிர தங்கள் வேண்டுதலுக்கேற்ப அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்தலாம்.

பெருமான்
எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோணதினத்தன்று பகல் 12 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தார். இதனை ஒன்பது நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடுகிறார்கள். தவிர ராம நவமி உற்சவம் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பெருமாள் பூமா தேவியை ஐப்பசி மாதம் திருவோண தினத்தன்று மணந்து கொண்டார். ஆண்டு தோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆடியில் ஜேஸ்டாபிஷேகம், ஆவணி திருவோணத்தில் பவித்திர உற்சவம், புரட்டாசியில் பிரம்மோற்சவம், மார்கழியில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம், தை மாதம் தெப்போற்சவம் நடைபெறும்.
கும்பகோணத்தில் இருந்து தெற்கில் 7 கிலோ மீட்டர் தூரத்திலும், காரைக்கால், திருநள்ளாறு செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திலும், ராகு தலமான திருநாகேஸ்வரம் கோவிலுக்கு மிக அருகிலும் ஒப்பிலியப்பன் கோவில் அமைந்துள்ளது