தேனி மாவட்டம், கம்பம் செல்லும் பாதையில் உள்ள ஊர். காளத்திநாதர் – ஞானாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

பஞ்சபூத தலங்களில் இது வாயு தலமாக உள்ளது. சிவபெருமான் இங்கு வாயு அம்சமாக இருப்பதாக கூறப்படுகிறது. வேடனாக இருந்த கண்ணப்பருக்கு காளஹஸ்தியில் முக்தி கொடுத்ததின் அடையாளமாக இங்கு கண்ணப்பருக்கும் தனி சன்னதி உண்டு. சிவராத்தியன்று சிறப்பு பூஜைகள் காளத்தீஸ்வரர் மற்றும் கண்ணப்பருக்கும் நடைபெறும். கண்நோய் உள்ளவர்கள் அன்றைய பூஜையில் கலந்து கொண்டு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட கண்நோய் குணமாகும் என்பது ஐதீகம். இந்த திருக்கோவிலில் ராகுவும் கேது இருவருக்கும் சுயரூபத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் மனைவியார்கள் சிம்ஹிகை – சித்ரலேகா ஆகியோருடன் இருப்பதுவும் அதே பிரகாரத்தில் குபேரர் ஐஸ்வர்யலட்சுமியுடன் காட்சி தருவதும் எங்கும் காண இயலாத ஒன்றாகும். அட்சயதிருதியை அன்று குபேரருக்கு விஷேச பூஜைகள் நடைபெறுவதில் கலந்து கொள்வோருக்கு சகல ஐஸ்வர்யமும் கிட்டும் என்பது ஐதீகம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு காலத்தில் ராகு சன்னதியில் சர்ப்பதோஷ பரிகார ஹோமம் நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சிகளின் போது ஹோம பூஜையும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுவது மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த தலம் முதலில் முருக பெருமானுக்காக இருந்த கோவில் என்றும் அதை இங்கு ஆண்ட ஒரு மன்னன் எழுப்பியதாகவும் புராண வரலாறு உள்ளது. ராணி மங்கம்மாள் ஆளுகைக்கு வந்த பின்னர் இந்த கோவில் நிர்வாகப் பொறுப்பு ஒரு சிவபக்தருக்கு கொடுக்கப்பட்டது. அவர் காளஹஸ்தீஸ்வரர் மீது அதீத பக்தி உடையவர். வயது முதிர்ந்த காலத்தில் காளஹஸ்தி செல்ல இயலாமல் போனது. அவர் சிவபெருமானை வேண்டியவுடன் பிரத்தியட்சமாகி, இங்கேயே உனக்காக இருக்கிறேன் என்று லிங்கரூபமாக எழுந்தருளினார். எனவே தான் இதை தென் காளஹஸ்தி என்று பெயர் பெற்றது.

காளத்திநாதர் இங்கு அருள்பாலித்து வரும் பொழுது, அம்பிகைக்கும் சன்னதி அமைக்க விரும்பினர். அதற்காக பல சிற்பிகளிடம் ஒப்படைத்தும், சிலை சரியாக வடிவெடுக்க முடியவில்லை. பக்தர் ஒருவருக்கு அருள்வந்து, அம்பிகை முல்லை பெரியாற்றில் வருவாள் என்றார். அதுபோல ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஆற்று வெள்ளத்தில் ஒரு பிரம்பு கூடை மிதந்து வந்தது. ஒரு அழகான அம்மன் சிலை பக்தர் அருள்வாக்கில் கூறியது போலவே இருந்தது கண்டு அனைவரும் மகிழ்ந்து ஞானாம்பிகை என்று பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்தனர். ஈஸ்வரனாருக்கும் அம்பாளுக்கும் இடையே சோமாஸ்கந்தர் அமைப்பில் சண்முகர் காட்சி தருகிறார். ஆற்றில் வந்த அம்மன் சற்று தொலைவில் உள்ள கோகிலாபுரம் என்ற இடத்தில் இருந்து வந்ததாகவும் எனவே அதை தாய்வீடு என்றும் திருக்கல்யாணத்தின் பொழுது, பிறந்த வீட்டுசீர் என ஈஸ்வரனுக்கும் அம்மனுக்கு வஸ்திரங்களையும், காய்கறி பழங்கள் படைத்து வழிபடுகின்றனர். இந்த திருத்தலம் முல்லை பெரியாற்றின் மேற்கு கரையில் உள்ளது. காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து வடக்கு திசை நோக்கி செல்வது போன்றே இங்கும் முல்லை பெரியாறு நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்வதால் சிறப்பு அம்சமாக கருதுகின்றனர்.
இத்தலத்தில் உள்ளே நுழையும் பொழுது, ராஜகணபதி என்ற பெயரில் விநாயக பெருமான் இருக்கிறார். சிவன்சன்னதி முன் மண்டப மேற்சுவற்றில், ராசி, நட்சத்திரக்கட்டத்தின் நடுவில் வாஸ்து பகவான் பத்மாசனத்தில் வீற்றிருந்து கடாமுடியுடன் காட்சி தருகிறார். அவருடைய தலைக்கு மேலே சிவலிங்கத்தை பிரம்மா, அம்பிகை இருவரும் வணங்கும் சிறப்ம் உள்ளது. இந்த மூன்று பேரையும் ஒரு பாம்பு வளைத்துள்ளது. அதன் அருகில் சந்திரன், சூரியன், விநாயகரபாதர், பதஞ்சலியும் உள்ளனர். வாஸ்து பகவானை வளைத்து 27 நட்சத்திரங்களும், 12 ராசி சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கிறது. எனவே நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு பூஜை செய்ய விரைவில் நிவாரணம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த திருத்தலத்திற்கு வெளியே விஷராஜா என்ற சனீஸ்வர பகவான் எல்லா தலங்களிலும் கறுப்பு நிற ஆடை அணிந்த சனீஸ்வரர் இங்கு பச்சை ஆடை அணிந்து காட்சி தருகிறார். விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டி நிவர்த்தி பெறுகின்றனர்.