Simple Pariharam Information
  • HOME
  • ABOUT US
  • BLOG
    • MANIMAADAM
  • CATEGORIES
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • WALLPAPER
  • GALLERY
  • CONTACT
  • HOME
  • ABOUT US
  • BLOG
    • MANIMAADAM
  • CATEGORIES
    • Festivals
    • Temple Information
    • Manimaadam
    • General Information
    • இன்றைய ராசிப்பலன்
    • Viratham Information
  • WALLPAPER
  • GALLERY
  • CONTACT

வெள்ளிங்கிரிஆண்டவர் திருக்கோயில்

velliangiri-malai

தலவரலாறு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார். இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர்கோயில் பாம்பாட்டி சுனை கைதட்டி சுனை சீதைவனம் அர்ச்சுனன்வில் பீமன்களி உருண்டை ஆண்டிசுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.

  • தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.
  • இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.
  • மனோன்மணிஅம்மன் னுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.
  • அடிவாரக் கோயில்: கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான  நடராஜர்திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன.
  • கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்துவிநாயகர்சிலைகள் அமைந்த #பஞ்சவிநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசிதூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.  
  • மலைக்கோயில்: கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வனப்பகுதி ஆகும். வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கோயிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று.
  • இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலைஏறக்கூடாது. மலைஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இத்தடிகள் அடிவாரத்தில் விற்பனைக்கு உள்ளன. தற்போது அதன் விலை ரூ 20/- அத்தடியை தங்கள் உயரத்திற்கு தகுந்தாற் போல் நீளத்தை சீராக்கி தர ரூ 5/- வசூலிக்கின்றனர். இத் தடி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாள சின்னமாக விளங்குவதுடன் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.
  • இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம் மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக #சிவரத்திரி #சித்ராபவுர்ணமி யன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்தபின் வெயில் கடுமை அதிகரிக்கும் முன் அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. மழை காலங்களில் மலை ஏறுவது பாதுகாப்பானது அல்ல மாறாக ஆபத்தை விளைவிக்கும். சறுக்கி, வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் #நாகத்துடன் கூடிய சிவலிங்கம்,  நந்தியம்பெருமான் மற்றும் #மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலைஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இச் சிலைகளை மலைப்பாதை தொடக்கத்தில் நிறுவி உள்ளனர்.
  • முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் 3/4 அடிமுதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும் அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும் போது இருட்டாகத்தான் இருக்கும். எனவே டார்ச் லைட் எடுத்துச் செல்வது மிகஅவசியம். கூடுதலாக ஒரு செட் பேட்டரி செல் வைத்திருப்பது நல்லது. இம்மலையில் காட்டுக் கொசுக்கள் அதிகம். உடல் பாகங்கள் வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டால் கொசுக்கடியால் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக மாலைநேரத்தில் கொசுக்கள் அதிகம் இருக்கும். இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த இரவு நேரத்திலும் வியர்வை கொட்டும். மலைஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர எழுத்துக்களால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுகிறது. சுவாசகுழாயும், சுவாசப் பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது. மூலிகைகளின் சாரம் மிகுந்த நீரை பருகுவதாலும் நீராடுவதாலும் உடல்நலம் சீராகுகிறது.
  • ஏழு மலைகளில் முதல் மலை மட்டும் அதிக உயரம். சுமார் 1 1/2 கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளைவிநாயகர்சன்னதி உள்ளது. இக்கோயிலின் அருகே இளைப்பாற ஒரு சிறிய கூடமும் பிஸ்கட், சோடா, சுக்கு காபி போன்றவற்றை விற்பனை செய்யும் கடையும் உள்ளது. வெள்ளிங்கிரி மலையில் சாப்பிட வேறு எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுனைநீர் கிடைக்கும். எனவே மலை ஏறும் போது சாப்பிட ரொட்டி ஜாம், சப்பாத்தி, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுப் பொருட்களைத் தவிர்தல் நலம். இல்லையெனில் மலைஏறும் போது நிறைய நீர் அருந்த வேண்டி வரும். நீர் அதிக அளவில் அருந்தினால் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகிவிடும்.
  • இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதால் நிலவு ஒளியிலும் பாதையில் வெளிச்சம் தெரிவதில்லை. ஓரிடத்தில் படி ஏறிச் செல்லும் போது கருத்த உருவம் ஒன்று நகர்ந்து வருவதை டார்ச் வெளிச்சத்தில் காண முடிந்தது. கூர்ந்து பார்த்தால் அது ஒரு கருந்தேள். பயந்து நடுங்கிவிட்டோம். நாங்கள் ஒதுங்கி அதற்கு பாதை விடுத்து பின் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏனெனில் அவை வாழும் இடத்திற்கு நாம் வந்துள்ளோம். அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்வது நியாயமில்லை. இரவு நேரத்தில் மின்மினி பூச்சிகளை அதிக அளவில் காணமுடிந்தது. இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.
  • மூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை.
  • ஒருவிதமான கோரைட் புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்ற என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.
  • ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்க கம்பளி உடைகளான மப்ளர், ஸ்வெட்டர், தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம். இம்மலையில் பயணிக்கும் போது நடைபாதையின் ஓரத்தில் வரப்பு போன்ற பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஒன்று எங்களை நோக்கி ஊர்ந்து வந்ததை எதிர் கொண்டோம். பாதை ஓரத்தில் ஒதுங்கி அதற்கு வழிவிட்டு, அது எங்களைக் கடந்து சென்றபின் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
  • அடுத்து ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் உள்ளன. குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.
  • ஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் ரூபாய் பத்துக்கு கிடைக்கும் சூடான சுவையான சுக்கு காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இக்கடையை அடுத்து கோயில் நிர்வாகத்தினரால் வெய்த தகர கொட்டகை ஒன்று உள்ளது. இதில் சுமார் 50/60 பேர் படுத்து ஓய்வெடுக்கலாம். இது இரண்டு மாத உபயோகத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். இங்கு தங்கி ஓய்வெடுத்து பின் விடியற்காலை பயணத்தைத் தொடரலாம். இங்கு தங்காமலும் செல்லலாம். இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். இம் மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக் கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம் நம் கண்களை விட்டு என்றுமே அகலாத நினைவுகளாகும்.
  • இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரசதகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூஜை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். ஆன்மிக அன்பர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாகத் திகழும் ஈசனை தொழுதுய்ய வேண்டும்.
  • கீழே இறங்கும் போது 3வது மலையினுள் நுழைந்து நடக்க ஆரம்பித்தால் ஏசி அறையினுள் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு வந்து விடுகிறது. அடர்ந்த மரங்களினிடையே பயணிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதது ஆகும். இரவு நேரத்தில் மலை ஏறும் போது மூலிகை காற்றின் வாடையையும், குளிர்ச்சியையும் உணர்ந்த நமக்கு கீழே இறங்கும் போது வண்டுகள் எழுப்பும் ரீங்காரம், பறவைகள் கத்துகின்ற மெல்லிய ஓசை, இயற்கை எழில் காட்சிகளை ரசித்து, தூய காற்றை சுவாசித்துக் கொண்டு பயணிக்கும் சுகமே அலாதி தான். இரண்டாம் மலையிலும் முதல் மலையிலும் பறக்கும் அணில்கள் மரங்களில் தாவிச் செல்வதைக் காணலாம். பாதை ஓரத்தில் உள்ள செடிகளில் சிவப்பு எறும்புகள் (செவ்வெறும்பு) அதிக அளவில் காணப்படுகின்றன. கடித்தால் உடல் முழுவதும் தடித்துக் கொள்வதுடன் அரிப்பும் உண்டாகி விடும். எனவே மிகுந்த கவனம் தேவை. கீழே இறங்கியவுடன் நல்ல முறையில் எந்த விதமான விபத்தும் இன்றி சென்று வந்ததற்காக ஈசனுக்கும் மனோன் மணியம்மைக்கும் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஒருவர் மலைக்குச் சென்று ஈசனைத் துதித்து பின் இறங்கிவிட்டால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திகழ்கிறார் எனக் கொள்ளலாம்.
  • ஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. மிகமிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வனத்துறையினர் விழாக் காலங்களில் அனைவரின் பைகளையும் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர் போன்றவற்றைப் பிரித்து எடுத்த பின்பு தான் மேலே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட நீர் மேலே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாறாக சலுகை விலையில் தண்ணீர் பாட்டில்களைத் தருகின்றனர். மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர்.

பிரார்த்தனை

தென்கயிலாயம் எனக்கூறப்படும் இத்தலத்து இறைவனிடம் எது வேண்டினாலும் கிடைக்கும்.

நேர்த்திக்கடன்

முடிந்தவர்கள் மலைமேல் உள்ள ஈசனை நேரில் சென்று தரிசிக்கலாம். இயலாதவர்கள் அடிவாரத்தில் உள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்தலாம்.

தலபெருமை

  • வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம். பாம்பாட்டி சித்தர், சாதுக்கள், யோகிகள் அர்ச்சுனன் முதலானோர் கடுந்தவம் மேற்கொண்டு வலிமை பெற்ற தவ பூமியாகும். வட கைலாயதிற்கு இணையாகவும் அதைவிட பெருமையும் சக்தியும், அற்புத குணங்களை உடைய ஏராளமான மூலிகைகளை தன்னகத்தே கொண்ட ஒப்புயர்வற்ற மலை தென் கைலாயம் எனும் வெள்ளிங்கிரி மலையாகும்.
  • காலை நேரத்தில் ஈசனைத் தரிசித்த பின் அம்மலையின் அழகு, சூரியோதயம், இயற்கை எழில் ஆகியவற்றை ரசிக்கலாம். இரவு நேரத்தில் ஏறி இறைவனைத் தொழுதபின் உடனே கீழே இறங்கி விட்டால் இந்த இயற்கைச் செல்வங்களை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம். இம் மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன் உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த் தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத் தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.

தல வரலாறு:

  • கொங்குநாட்டின் மேற்கு எல்லையில் இறைவன் சிவ பெருமானின் திருவுருவாக விளங்குவது தென் கயிலாயமென்னும் வெள்ளியங்கிரி. இறைவன் பஞ்சலிங்கமாக விளங்கும் இத்தலம் இரசதகிரி, தக்கிண கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மாறாக தக்கன் செய்த வேள்விக்கு தேவர் முனிவர்கள் சென்றதனால் இறைவன் வேள்வியை சினந்து அழித்தார். தேவர் முனிவர்களை சபித்தார். தான் தன் முகங்களை ஐந்து கிரிகளாகக் கொண்டு கொங்குநாட்டில் மறைந்தார். சாபம் நீங்கப் பெற்ற தேவர் முனிவர்கள் சிவபெருமானைக் காண சென்றனர். நவகிரக பீடிதங்கள் நீங்கி பழநி திருவாவினன்குடி கன்னிகாவனத்தில் புரட்டாசி மாதம் ஐந்து வாரம் தவம் இயற்றி சனிபகவான் அருள்பெற்றும், ஐப்பசி ஐந்து வாரம் பவானியில் துலாமுழுக்கு செய்தும், கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் மேற்கண்ட பஞ்சகிரிகளுக்கும் சென்று பஞ்சமுகங்களைத் தொழுதும் பேறுபெற்றனர். முடிவில் ஐந்தாம் வாரத்தில் மயேசு கிரியில் (வெள்ளியங்கிரியில்) இறைவனைக் கண்டும் வணங்கி பேறுபெற்றனர். தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாம் ஆண்டிசுனை தீர்த்தம் உள்ளது. அர்சுனன் கடுந்தவம் புரிந்து பாசுபதம் பெற்றதும், முக்தி பெற்றதும் இத்தலமே என்று புராணவரலாறு கூறுகிறது.
  • உமயவள் வேண்டுதலின் பேரில் திருநடனம் ஆடியதும் இத்தலமே. அதுவே இப்போது பலகார (பல்கலை) மேடை என்று அழைக்கப்படுகிறது. ஆற்றா மக்களின் அரும் பசிகளைவோர் மேற்றே உலகின் மெய்நறி வாழ்க்கை என்பதுபோல் காசியில் ஆயிரம் அன்னதானம் செய்து பெரும்பயனை இந்த கயிலையின் சாரலில் ஒரு பிச்சையிட்டபோது அடைவர். இறைவனே இயற்கையில் எழுகின்ற இன்னொளியே நீ எல்லாமாகி எங்கும் விளங்குகின்றாய். என்னைப் பற்றிய பாவங்கள் நீங்குமாறு இத்தலத்தில் அருள்புரிய ஒருநாள் ஒரு பொழுதாகிலும் வெள்ளிமலையானை நினைத்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தலத்திற்கு வருகை தருவோர்க்கு எல்லா பயனையும் நல்குவார்.

Share this:

  • Tweet

Like this:

Like Loading...

Related

Previous Storyலக்ஷ்மண விரதம்
Next Storyமுருகனின் 16வகை கோலங்கள்

Leave a Reply Cancel reply

SEARCH

CATEGORIES

  • Festivals
  • General info whatsapp
  • Manimaadam
  • Temple info whatsapp
  • Viratham info
  • இன்றைய ராசிப்பலன்

LATEST POSTS

  • renuka_maa
    மாறு(தலை)பெற்ற ரேணுகாதேவி
  • A Power Circle Around us
  • guru-qulities-in veda
    Who is Guru?
  • 1522218653-6734
    பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்
  • cxs
    காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை

Astrology

Free Kundli Software
Powered by Astro-Vision

மேலும் படிக்க

  • 1522218653-6734
    பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்
  • DGWeB94UQAA1EWu
    வரலக்ஷ்மிவிரதம்( 09.08.2019 ) முன்னிட்டு மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!
  • festivals
    Tamil Festivals List 2019
  • sivan-5
    பிரதோஷம்2019

Site Links

  • About us
  • Blog
  • contact
  • Gallery
  • Home
  • Manimaadam
  • shop
  • Vinayagar Agaval

Our Sites

  • Pariharam.info
  • Medicine.Pariharam.info
  • Lord Karuppu

Blog Categories

  • Festivals (4)
  • General info whatsapp (51)
  • Manimaadam (1)
  • Temple info whatsapp (53)
  • Viratham info (3)
  • இன்றைய ராசிப்பலன் (3)

DEVELOPED BY Shanmugar Web Solutions.

%d bloggers like this: